Home One Line P1 20 வருடமாக சாஹிட் ஹமிடியே அறக்கட்டளையை நிர்வகித்துள்ளார்

20 வருடமாக சாஹிட் ஹமிடியே அறக்கட்டளையை நிர்வகித்துள்ளார்

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தனது அறக்கட்டளையான யாயாசான் அகால்பூடியின் விவகாரங்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் நிர்வகித்து வந்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 1997- ஆம் ஆண்டில் இது அமைக்கப்பட்டதிலிருந்து வருடாந்திர கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

“யாயாசான் அகால்பூடி 1997- லிருந்து 2018 வரை எந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தையும் அழைக்கவில்லை. டத்தோஸ்ரீ (சாஹிட்) யாயாசான் அகால்பூடியின் நிதி மற்றும் செயல்பாட்டு விஷயங்களை நிர்வகித்தார்,” என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) விசாரணை அதிகாரி கைருடின் கிலாவ் கூறினார்.

யாயாசான் அகால்பூடியிலிருந்து மில்லியன் கணக்கான பணமோசடி மற்றும் நம்பிக்கை மோசடி குற்றவியல் குற்றச்சாட்டுகளை சாஹிட் எதிர்கொள்கிறார். மேலும், அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு இலஞ்சம் வாங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

யாயாசான் அகால்பூடியின் செயல்பாடுகள் மற்றும் அறக்கட்டளை, அதன் நிதியை எவ்வாறு பெற்றது என்பது குறித்து மற்ற அறங்காவலர்கள் தெரியாத நிலையில் இருப்பதாகவும் கைருடின் கூறினார்.

“ஆரம்பத்தில், 1997- ஆம் ஆண்டில் யாயாசான் அகால்பூடி அமைக்கப்பட்டபோது டத்தோஸ்ரீ, சுல்கிப்லி சென்தெரி மற்றும் முகமட் சம்சூரி துன் ஆகியோர் அறங்காவலர்களாக இருந்தனர். இருப்பினும், சுல்கிப்லி மற்றும் சம்சூரி, நிறுவன செயலாளர் இட்ரிஸ் கெச்செக் ஆகியோருடன் பின்னர் சாஹிட் ஹமிடியால் வெளியேறும்படி கூறப்பட்டது,” என்று கைருடின் கூறினார்.

இதனையடுத்து, சுல்கிப்லி மற்றும் சம்சூரிக்கு பதிலாக கைருடின் தார்மிஜி மற்றும் முகமட் நபில் சலே ஆகியோர் முன்னர் இருந்தவர்கள் இடத்தில் அமர்ந்தனர். மகிந்தர் கவுர் நிறுவனத்தின் செயலாளரானார்.

சாஹிட், சுல்கிப்லி மற்றும் சம்சூரி ஆகியோர் ஆரம்பத்தில் யாயாசான் அகால்பூடியின் வங்கிக் கணக்கில் கையொப்பமிட்டவர்கள் என்று சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா விசாரணையை மார்ச் 18- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.