கோலாலம்பூர்: காவல் துறையில் பணியாற்றும் இளம் காவல் துறை அதிகாரிகள் சிலர் தங்களது தவறான நடவடிக்கைகளை மறைப்பதற்கும், ஈடுபடுவதற்கும், தம்மை வீழ்த்த முயற்சிகள் செய்வதாக காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அப்துல் ஹாமிட், இவர்களை, காலம் தாழ்த்தாது விரைவில் நேர்வழிக்கு திரும்புமாறு அறிவுறுத்தினார்.
சினார் ஹரியான் செய்தித் தளத்திற்கு வழங்கிய ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
தவறான செயல்களை செய்ய அனுமதிக்க காவல் துறையை கட்டுப்படுத்த ஓர் இயக்கம் இருப்பதாக ஒரு குறிப்பிட்ட தகவல் பற்றி ஹாமிட் பாடோரிடம் கேட்கப்பட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விளக்கமளித்த அவர், இந்த விஷயத்தால் தான் குறிவைக்கப்பட்டதாகவும், அவருக்கு எதிராக சதி செய்தவர்கள் மனந்திருந்துவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.
“நான் அவர்களை மனம் திருந்தும்படி கேட்கிறேன். உங்களுக்கு 60 வயதாக இருக்கும்போது, உங்கள் நீல நிற சீருடையை அணியமாட்டீர்கள். யாரும் உங்களைக் கண்டு பயப்பட மாட்டார்கள். அந்நேரத்தில், நீங்கள் வருத்தப்படுவீர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.