கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தல் 2023- இல் மட்டுமே நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையம் அறிவித்த 18 வயது வாக்களிக்கும் முறையை தாமப்படுத்துவதை அமைச்சர் ஒருவர் ஆதரித்துள்ளார்.
“அடுத்த தேர்தல் 2023- இல் மட்டுமே நடக்கவுள்ளது. 2020 அல்லது 2021- க்குள் இது நடத்தப்படும் என்று யார் கூறியது, ?” என்று அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
இது போன்ற புதிய சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அஸ்மின் கூறினார்.
18 வயது நிரம்பியவர்கள் மாநிலத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதிக்க மாநில அளவில் திருத்தங்களும் செய்யப்பட வேண்டும் என்றும் அஸ்மின் கூறினார்.
தேசிய கூட்டணி அரசாங்கம் இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையை ஆதரிப்பதாக அவர் கூறினார். இது தொடர்பாக எந்தவொரு அனுமானங்களையும் பொது மக்கள் கொண்டிருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.