கோலாலம்பூர்: வாக்களிக்கும் வயதைக் குறைத்து, தானியங்கி பதிவை அமல்படுத்துவதற்கான வெற்றிகரமான திருத்தத்தின் பின்னணியில் பிரதானமாக இருந்த “உண்டி18” தன்னார்வ தொண்டு நிறுவனம் அடுத்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும்.
ஏப்ரல் 2-ஆம் தேதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும். மத்திய அரசியலமைப்பின் திருத்தத்தைத் தொடர்ந்து, 18 முதல் 21 வயதுக்குட்பட்ட அனைவரையும் தானாக வாக்காளர்களாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்தும் என்று அது கூறியுள்ளது.
“18 முதல் 20 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு அவர்களின் அரசியலமைப்பு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்று ‘உண்டி18’ நம்புகிறது. ஒவ்வொரு வாக்குகளும் ஜனநாயகத்தில் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். உண்டி 18 மசோதாவை அமல்படுத்துவதில் மேலும் தாமதம் என்பது இளைஞர்களின் குரல்களுக்கு முறையாக பாகுபாடு காட்டுகிறது,” என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.
நேற்று ஓர் அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சல்லே, 2022 செப்டம்பர் 1-க்கு பிறகே 18 வயது வாக்களிக்கும் முறையை செயல்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.