கோலாலம்பூர்: அமைச்சரவையிலிருந்து பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழை, கட்சிக்கு விசுவாசமற்றவர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் குரலை மதிக்காதரவர்கள் என்று அம்னோ உச்சமன்றக் குழுவின் முன்னாள் உறுப்பினர் நஸ்ரி அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு நிபந்தனையும் இன்றி பதவி விலகக் கோரும் அமைச்சர் ரோசோல் வாஹிட் (பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர்) அழைப்பை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். சொல்லும் வரையிலும் எதற்கு காத்திருக்க வேண்டும்? நிபந்தனையின்றி வெளியேறுங்கள், அது கடினம் அல்ல. அடிமட்டத்தின் குரலை நாம் செவிமடுக்க வேண்டும், ” என்று நஸ்ரி எப்எம்டியிடம் கூறினார்.
இதற்கிடையில், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அம்னோ அமைச்சர்களை அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்குமாறு நஸ்ரி நினைவுபடுத்தினார்.
அம்னோவுடன் அல்லது பெர்சாத்துவுடன் இருக்க விரும்புகிறீர்களா என்பதை அம்னோ அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“(அவர்கள்) இப்போது பதவி விலகினால், அது அவசரநிலை காரணமாக அரசாங்கத்தை பாதிக்காது. ஒரு வேளை தயங்கினால், அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லை, சுயமரியாதை இல்லை. நீங்கள் தைரியமாக இல்லாவிட்டால் உங்களை ஒரு போராளி என்று சொல்லிக் கொள்ள வேண்டாம், ” என்று நஸ்ரி கூறினார்.