Home கருத்தாய்வு “அண்ணன் என்னடா! தம்பி என்னடா!” – வேதமூர்த்தி ஹிண்ட்ராப்பை சுயநலனுக்காக “கடத்தி” விட்டார் – உதயகுமார்...

“அண்ணன் என்னடா! தம்பி என்னடா!” – வேதமூர்த்தி ஹிண்ட்ராப்பை சுயநலனுக்காக “கடத்தி” விட்டார் – உதயகுமார் குற்றச்சாட்டு

891
0
SHARE
Ad

Hindraf Brothersஏப்ரல் 18 – ஹிண்ட்ராப்பை நிறுவி அதன் தூண்களாக விளங்கிய உதயகுமார்-வேதமூர்த்தி சகோதரர்கள் இன்று “அண்ணன் என்னடா! தம்பி என்னடா! அவசரமான உலகத்திலே” என்ற கண்ணதாசனின் காலத்தால் அழியாத பாட்டு வரிகளைப் பிரதிபலிப்பதைப் போன்று எதிரும் புதிருமாக 13வது பொதுத் தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.

#TamilSchoolmychoice

வேதமூர்த்தி நாடு திரும்பியது முதல் – பின்னர் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது வரை – எதுவும் அவரைப் பற்றி சொல்லாமல் மௌனம் காத்த மூத்த சகோதரர் உதயகுமார் இப்போது “வேதமூர்த்தி ஹிண்ட்ராப்பை தேசிய முன்னணிக்கு ஆதரவாக “கடத்திக்” கொண்டு போய்விட்டார்” என்று முதன் முறையாக உள்ளம் குமுறி வெடித்திருக்கின்றார்.

இன்று மாலை பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் ஹிண்ட்ராப்பிற்கும் தேசிய முன்னணி சார்பாக பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற “புரிந்துணர்வு” ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் மலேசியாகினி இணையத் தளத்திற்கு குறுந்தகவல் ஒன்றை உதயகுமார் அனுப்பியுள்ளார்.

“ஹிண்ட்ராப் ஐந்தாண்டு திட்டம் என்று எதுவும் எப்போதும் இருந்ததில்லை”

அதில் “ஹிண்ட்ராப் 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் அதன் கொள்கை இலக்கில் எந்த மாற்றமுமில்லை. நாங்கள் தேசிய முன்னணியை எதிர்க்கின்றோம். 2007இல் நாங்கள் முன்மொழிந்த எங்களின் 18 அம்ச கோரிக்கை இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. பொதுத் தேர்தல் வேட்பு மனுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் இவ்வாறு ஐந்தாண்டு வரைவு திட்டத்தை ஒருவர் அதாவது பிரதமர் வந்து அங்கீகரிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று உதயகுமார் சாடியுள்ளார்.

இதுபோன்ற ஐந்தாண்டு வரைவுத் திட்டம் என்பது எந்த காலத்திலும் ஹிண்ட்ராப்பின் போராட்டமாக இருந்தது கிடையாது என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.

“நான்தான் ஹிண்ட்ராப் இயக்கத்தின் மூத்த – இயல்பாகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்று கூறிக் கொண்டுள்ள உதயகுமார், ஹிண்ட்ராப் தங்களின் 18 அம்சக் கோரிக்கையில் கேட்டுக் கொண்ட எதையுமே தேசிய முன்னணி இதுவரை இந்திய சமுதாயத்திற்காக செய்யவில்லை என்றும், நமக்கு கிடைத்தது பூஜ்யம்தான் என்றும் மாறாக இன்னும் ஏழை இந்தியர்களுக்கு பரிசுப் பொட்டலங்களையும், அரிசிப் பொட்டலங்களையும் தந்து கேவலப்படுத்தும் கலாச்சாரத்தைத்தான் தேசிய முன்னணி செய்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய முன்னணியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்” – உதயகுமார்

“எங்களின் இறுதி முடிவு இதுதான். நாங்கள் தேசிய முன்னணியை ஆதரிக்க மாட்டோம். அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் வாக்களிக்கமாட்டோம் என்ற ஹிண்ட்ராப் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மக்கள் கூட்டணிக்கு வாக்களிப்பது அவரவர்களின் சொந்த விருப்பம்” என்றும் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

“மக்கள் கூட்டணியை நாங்கள் ஆதரிக்க முடியாது. காரணம் அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களில் இந்தியர்களுக்கு செய்ய முடியாதவற்றைப் பற்றி அவர்கள் பொறுப்பேற்கவில்லை” என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.

“ஏழை இந்தியர்களைப் பொறுத்தவரை தேசிய முன்னணி அதிகமாக ஏமாற்றுகின்றது. மக்கள் கூட்டணியோ கொஞ்சம் குறைவாக ஏமாற்றுகின்றது. அம்னோவின் மாற்றாக மக்கள் கூட்டணி மாறிவிடக் கூடாது. அதற்காகத்தான் நாங்கள் கோத்தா ராஜா, ஸ்ரீ அண்டலாஸ் தொகுதிகளில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை” என்றும் உதயகுமார் உறுதியாகக் கூறியுள்ளார்.

இதிலிருந்து எதிரும் புதிருமாக திரும்பியுள்ள ஹிண்ட்ராப் சகோதரர்கள் இனி பொதுத்தேர்தல் முடியும் வரை எப்படியெல்லாம் மோதிக் கொள்ளப் போகின்றார்கள் – ஹிண்ட்ராப்பின் மற்ற தலைவர்கள் எப்படியெல்லாம் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளப் போகின்றார்கள் – என்பதெல்லாம் சுவாரசியமாக தொடரப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.