கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்த தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டம் தகுந்த காரணங்கள் இன்றி இரத்து செய்யப்பட்டது.
தேசிய முன்னணியின் தொடர்புக் குழு சார்பில் வாட்ஸ்எப் குறுஞ்செய்தி மூலம் அந்தக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
பெர்சாத்து கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என அம்னோ முடிவெடுத்ததைத் தொடர்ந்து தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கு இடையே முரண்பாடான கருத்துகள் எழுந்திருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தேசியப் பேராளர் மாநாட்டை நடத்திய மஇகா, அந்த மாநாட்டில் பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அழைத்து இயங்கலை வழி உரையாட வாய்ப்பளித்தது.
தேசிய முன்னணியின் உச்சமன்றக் குழு முடிவெடுக்கும்வரை தொடர்ந்து தேசியக் கூட்டணியையும் பிரதமர் மொகிதின் யாசினையும் ஆதரித்து வருவோம் என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மஇகா மாநாட்டில் அறிவித்தார்.