சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.
வாக்குச்சாவடி மையத்துக்கு வந்ததும் ஸ்டாலினை அதிகாரிகள் முன்வருமாறு அழைத்ததை நிராகரித்து, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தமது வாக்கை செலுத்தினார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று நடைபெறும் தேர்தலில், தமிழக மக்கள் ஜனநாயகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்து தமது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021