கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கிற்கு எதிராக திவால் அறிவிப்பு அரசியல் சதித்திட்டமாகும் என்று முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அம்னோ பொதுப் பேரவை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கடிதம் வழங்கப்பட்டதாக முகமட் ஷாபி அப்துல்லா இன்று தெரிவித்தார்.
திவால் நடவடிக்கையை தள்ளி வைக்க விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.
முன்னதாக, ஏப்ரல் 5-ஆம் தேதி வருமான வரித் துறை நஜிப்பிடம் திவால் அறிவிப்பு கடிதத்தை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது நஜிப்பிடமிருந்து வருமான வரி வாரியம் 1.7 பில்லியன் ரிங்கிட் வரியைக் கோருவது தொடர்பானதாகும்.
ஐஆர்பி அதிகாரிகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 5) நஜிப்பின் இல்லத்திற்கு சென்று நேரடியாக அவரிடம் இந்தக் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜூன் 2019-இல், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப்பிடமிருந்து 1.69 பில்லியனுக்கும் அதிகமான தொகையை கோருவதற்காக ஐஆர்பி மூலம் அரசாங்கம் நஜிப் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தது.
மதிப்பீட்டு அறிவிப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், நஜிப் 2011 முதல் 2017 வரையிலான வருமான வரி செலுத்த தவறியதாக அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடனின் அளவு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்தக் கடிதம் பெற்றதை நஜிப் தமது முகநூல் பக்கம் மூலமாக ஒரு நீண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் அவரது அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.