கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பேசியதாக வெளியான குரல் பதிவு போலியானது என்று நம்பினால் புகார் அளிக்குமாறு காவல் துறை வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்த பின்பே, காவல் துறையினர் குரல் பதிவை பகுப்பாய்வு செய்வார்கள் என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
“புகார் அளிக்கப்பட்டதும், அவதூறு என்று கூறும் போது, நாங்கள் தொடர்ந்து விசாரணையை ஆரம்பிப்போம். அதன்பிறகுதான், ஆதாரங்களை மதிப்பிடுவதற்கு குரல் பதிவை காவல் துறை பகுப்பாய்வு செய்யும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இதுவரை குரல் பதிவு தொடர்பாக ஏழு புகார்கள் வந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
“எனக்கு அறிவிக்கப்படவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். அவதூறு என்பது உண்மையாக இருந்தால், புகார் அளிக்கவும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில், அம்னோ பொதுப் பேரவைக்குப் பிறகு சாஹிட் ஹமிடியை வாழ்த்தி அன்வார் பேசியதாக குரல் பதிவு ஒன்று பரவலாகப் பகிரப்பட்டது.
அவர்கள் இருவரும் அக்குரல் பதிவை போலி என்று மறுத்துள்ளனர். மேலும், அவர்களது அதிகாரிகள் புகார் அளிப்பர் என்று கூறியுள்ளனர்.