கோலாலம்பூர்: எந்தவொரு ஊழல் வழக்கிலும் தலையிடப்போவதில்லை என்று பிரதமர் மொகிதின் யாசின் உறுதியளித்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
“அரசியல் தலைவர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள் செய்த எந்தவொரு ஊழல் நடவடிக்கைகளிலும் தலையிடப்போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து விசாரிக்க, அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தவொரு குற்றச்சாட்டிலும் அவர் தலையிட விரும்பவில்லை,” என்று அவர் நேற்று இரவு அல்ஹிஜ்ரா தொலைக்காட்சி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“எம்ஏசிசியின் தலைவரானதில் இருந்து, (தலையீடு) எதுவும் இல்லை. யாரும் தலையிடவும் எனக்கு வழிமுறைகளை வழங்கவும் விரும்பவில்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விசாரணையை நடத்துவதில் எங்கள் முடிவை அது பாதிக்காது. நாங்கள் இன்னும் வழக்குகளை விசாரித்து வருகிறோம்,” என்று அவர் அரசியல் தலையீடு ஏதேனும் உள்ளதா என்று கேட்டபோது கூறினார்.
முன்னதாக, எம்ஏசிசி அதன் தனி அடையாளத்தை இழந்து விட்டதாக ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.