Home இந்தியா பாராளுமன்றத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மாயாவதி

பாராளுமன்றத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மாயாவதி

594
0
SHARE
Ad

mayavathiலக்னோ, ஏப்ரல் 19-  பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிற முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி அல்லது மாயாவதி( படம்) தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவை திரும்ப பெற்றால், எந்த நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தல் வரும் வாய்ப்பும் உள்ளது.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க மாயாவதி தயாராகி வருகிறார். அந்த வகையில் அவர் தனது கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை லக்னோவில் கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா வீட்டில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் நேற்று வெளியிட்டார்.

மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். 36 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பிராமண சமுதாயத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். (இந்த விகிதாச்சார அடிப்படையில் கடந்த 2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தித்தான் மாயாவதி ஆட்சியைப் பிடித்தார்.)

#TamilSchoolmychoice

தற்போதைய எம்.பி.க்கள் 6 பேருக்கும், டெல்லி மேல்-சபை எம்.பி. ஒருவருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாயாவதி வாய்ப்பு அளித்துள்ளார். மாயாவதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிற முக்கிய வேட்பாளர்கள் வருமாறு:-

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள சிவசேனா முன்னாள் கவுன்சிலர் பவன் பாண்டே, சுல்தான்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் வருண்காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த கொள்ளைக்காரி பூலான் தேவியின் கணவர் உமீத் சிங் (ஷாஜகான்பூர் தொகுதி), மாநில முன்னாள் மந்திரி ராகேஷ்தர் திரிபாதி (மிர்சாப்பூர்), கட்சியின் மூத்த தலைவர் ராம்வீர் உபாத்யாயாவின் மனைவி சீமா எம்.பி. (பதேப்பூர் சிக்ரி), ராம்வீர் உபாத்யாயாவின் சகோதரர் முகுல் உபாத்யாயா (காசியாபாத்) தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். காசியாபாத் தொகுதி பா.ஜனதா கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்கின் தொகுதி ஆகும்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மாயாவதி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பிராமண சமுதாயத்தினர் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டனர். ஆனால் இப்போது அவர்கள் மற்ற உயர் சாதியுடன் எங்களுடன் வந்து விட்டனர். உரிய காலத்துக்கு முன்பாக நடக்கப்போகிற பாராளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முடிவுகள் அமையும். உயர்சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத தலைவர்கள் சிலருக்கு இப்போது பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தேர்தலில் 100 சதவீத ஈடுபாடு காட்ட அவர்கள் விரும்பினர்.

உத்தரபிரதேசத்தில் பல்வேறு காரணங்களால் மோடி தாக்கம் வேலைக்கு ஆகாது. 3-வது அணி, 4-வது அணி என்ற கேள்விக்கே இடமில்லை. இவையெல்லாம் கட்சிகள் பெறும் இடங்கள், தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு மாயாவதி, இது குறித்து நீங்கள் அந்தக் கட்சியிடம்தான் கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சி பற்றிய கேள்விக்கு நான் எப்படி பதில் அளிக்க முடியும்? என எதிர்க்கேள்வி கேட்டார்.

மாயாவதி தொடர்ந்து, பிராமண சமுதாய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதன் இடையேயும் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் தலித்துகளைப் போன்றே பிராமண சமுதாயத்தினரும் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என குற்றம் சாட்டினார்.