கோலாலம்பூர் : தற்போது நடப்பிலிருந்து அவசர கால சட்டத்தை மேலும் நீண்ட காலத்திற்கு நீட்டிக்க ஆளும் தேசியக் கூட்டணி எண்ணம் கொண்டிருக்கிறது என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரித்திருக்கிறார்.
காரணம், அவசர காலத்தை முடிவுக்குக் கொண்டு வர எந்தவிதமான நிபந்தனைகளும், விளக்கங்களும் வழங்கப்படவில்லை என்றும் அன்வார் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தற்போது அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகும் அவசர காலத்தை நீட்டிக்கலாம் எனவும் அன்வார் தெரிவித்தார்.
“கொவிட் தடுப்பூசி திட்டம் மெதுவாக அமுலாக்கம் செய்யப்படுகிறது. இதனால் 2021-இல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இருக்காது. தேசியக் கூட்டணி அரசாங்கம் இதனால் மிகப் பெரிய தோல்வி கண்ட அரசாங்கமாக இருக்கும்” என அன்வார் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 26) தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.