Home Photo News மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்

மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்

815
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா, இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் கட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம், மஇகாவின் நடப்பு தலைமைத்துவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்திய சமுதாயத்தைச் சார்ந்த பல்வேறு தரப்புகளுடன் அடிக்கடி கலந்துரையாடல்களையும் சந்திப்புகளையும் மஇகா தலைவர்கள் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 24) மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் மஇகா தலைவர்கள் நடத்திய நேரடி சந்திப்பு.

#TamilSchoolmychoice

இந்திய மாணவர்களின் கல்விப் பிரச்சனைகளைக் கண்டறியும் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடல், இந்திய மாணவர்கள் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்குத் தங்களின் ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நாட்டின் பொதுப் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.

மஇகாவின் எதிர்காலத் திட்டங்கள், தூரநோக்கு சிந்தனைகள், இந்தியர் மேம்பாட்டுக்காக வகுத்திருக்கும் வியூகங்கள் ஆகியவற்றை விக்னேஸ்வரன் மாணவர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். கடந்த 70 ஆண்டுகளாக மஇகா இந்திய சமுதாயத்திற்காக நடத்திய போராட்டங்கள், செய்து முடித்த சாதனைகள் குறித்து புள்ளிவிவரங்களுடன் விக்னேஸ்வரன் விவரித்தார்.

இந்திய சமுதாயத்தை அறிவாற்றல் நிறைந்த, கல்வித் திறன்கள் கொண்ட சமுதாயமாக உருமாற்ற மஇகா எடுத்து வரும் முயற்சிகள், திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக துணைத் தலைவரும், அமைச்சருமான சரவணனும் தெரிவித்தார்.

“இந்தக் கலந்துரையாடலில் பங்கு கொள்ள முன்வந்த மாணவர்களை நான் பாராட்டுகிறேன். இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து உரக்கக் குரல் கொடுக்க முன்வந்திருக்கும் அவர்களின் துணிச்சலையும் மதிக்கிறேன். பகிரங்கமாக கலந்துரையாடல் மூலம் தங்களின் விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள். குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கலந்துரையாடல்களை இந்திய மாணவர்களுடனும் இந்திய சமூகத்தின் மற்ற தரப்புகளுடனும் மஇகா தொடர்ந்து நடத்தி வரும்” என்றும் சரவணன் மேலும் கருத்துரைத்தார்.

மஇகா தலைவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த படக் காட்சிகளையும் இங்கே காணலாம்: