Home வணிகம்/தொழில் நுட்பம் பிபைசர், 26 பில்லியன் டாலர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை விற்கும்

பிபைசர், 26 பில்லியன் டாலர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை விற்கும்

527
0
SHARE
Ad

நியூயார்க் : காக்கைக்குக் கொண்டாட்டம், எருதுக்குத் திண்டாட்டம் என்பது போல, உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகளால் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் பிஃபைசர் நிறுவனமோ கொண்டாட்டத்தில் இருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய கொவிட்-19 தடுப்பூசிகளை விற்பனை செய்ய இலக்கு கொண்டிருப்பதாக பிஃபைசர் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இது ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்திருந்த இலக்கை விட 70 விழுக்காடு அதிகமாகும். கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் அரசாங்கங்கள் முண்டியடித்துக் கொண்டு பிஃபைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் 1.6 பில்லியன் அளவை (டோஸ்) தடுப்பூசிகளை விற்பனை செய்ய பிஃபைசர் நோக்கம் கொண்டிருக்கிறது.

2021-இன் முதல் காலாண்டில் பிஃபைசர் தயாரிக்கும் மருந்துகளில் மிக அதிகமாக விற்பனையாகும் மருந்தாக கொவிட் தடுப்பூசிகள் திகழ்கின்றன.

இந்த மருந்தை பையோ என்டெக்ட் (BioNTech) என்ற நிறுவனத்துடன் இணைந்து பிஃபைசர் தயாரிக்கிறது. தயாரிப்புக்கான செலவினங்களை இரண்டு நிறுவனங்களும் சரிபாதியாக பிரித்துக் கொள்கின்றன. அதே வேளையில் விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்திலும் இரண்டு நிறுவனங்களும் சரிபாதியாக பிரித்துக் கொள்கின்றன.

இந்த ஆண்டு மட்டுமின்றி, 2022 ஆண்டு முழுமைக்கும் கொவிட் தடுப்பூசிகளை விற்பதற்கான உறுதியான அளிப்பாணைகளை (order) பிஃபைசர் கொண்டிருக்கிறது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து 2.5 பில்லியன் அளவை தடுப்பூசிகளை இந்த ஆண்டு தயாரிக்க இலக்கு கொண்டிருக்கின்றன.