Home நாடு “விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தன்னம்பிக்கை அளிக்கிறது” – சாமி ரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் டி.முருகையா உரை

“விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தன்னம்பிக்கை அளிக்கிறது” – சாமி ரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் டி.முருகையா உரை

650
0
SHARE
Ad
டத்தோ டி.முருகையா

போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தில் மஇகா தலைமையகத்தின் பிரதிநிதியாக தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மஇகா சாமிரோட் கிளையின் தலைவராக இருப்பவர், மஇகா தேசியத் தலைவரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரனாவார். விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தில் தலைமையுரையாற்றினார்.

“நமது தேசியத் தலைவரின் கிளை ஆண்டுக் கூட்டத்தில் மஇகா பிரதிநிதியாக கலந்து கொள்ளும் கௌரவம் அளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட டி.முருகையா, “மஇகாவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முன்னெடுத்து வரும் திட்டங்களாலும், அரசியல் அணுகுமுறைகளாலும் மஇகா உறுப்பினர்களிடையே எழுச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது” என தனதுரையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக தனது சொந்த மஇகா கிளையின் ஆண்டுக் கூட்டத்தை இத்தனை சிறப்புடனும், ஏராளமான உறுப்பினர்களுடனும் மற்ற கிளைகளுக்கு முன்னுதாரணமாக அவரே முன்னின்று நடத்திக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

தேநீர் விருந்துபசரிப்புடன் வழக்கமாக நடைபெறும் ஆண்டுக் கூட்டம் போல இல்லாமல், கொவிட்-19 கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு ஏற்ப, உறுப்பினர்களுக்கான பரிசோதனைகளுடன் இந்த சாமி ரோட் கிளை ஆண்டுக்கூட்டம் நடைபெறுகிறது என்பதையும் முருகையா சுட்டிக் காட்டினார்.

“நானும் இந்த ஆண்டில் பல கிளைகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறேன். குறிப்பாக நான் மஇகாவின் தொகுதி ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் தெலுக் இந்தான் தொகுதியில் பல கிளைகளின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். எல்லாக் கூட்டங்களிலும் திரளாக உறுப்பினர்கள் திரண்டு வந்து ஆதரவு தருகின்றனர். இதன் மூலம் டான்ஸ்ரீயின் தலைமைத்துவம் மஇகா உறுப்பினர்களிடையே தன்னம்பிக்கையையும், மிகப் பெரிய எதிர்பார்ப்புகளையும் விதைத்திருப்பதை நம்மால் உணர முடிகிறது” என்றும் முருகையா தெரிவித்தார்.

மஇகாவுக்கு என்றுமே கிளைகள்தான் முதுகெலும்பாகவும், ஆணிவேராகவும் செயல்பட்டு வந்திருக்கின்றன எனக் குறிப்பிட்ட முருகையா அதை கிளைத்தலைவர்களும் உணர்ந்து தங்களின் வட்டாரங்களில் இந்திய சமூகத்திற்கான சேவைகளைப் பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில் ஆண்டுக் கூட்டங்கள் என்று வரும்போது எல்லா கிளை உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெறும் வண்ணமும், கட்சியின் நிலவரங்களை அவர்களும் தெரிந்து கொள்ளும் விதத்திலும் கிளைத் தலைவர்கள் ஆண்டுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் முருகையா கேட்டுக் கொண்டார்.

மஇகாவின் விவகாரங்களில் குறிப்பாக கட்சியின் சொத்துடமைகளை விக்னேஸ்வரன் வெளிப்படைத் தன்மையுடன் பகிரங்கமாக அறிவித்து கையாண்டு வருகிறார். இதன் காரணமாகவும் மஇகா உறுப்பினர்களுக்கும், இந்தியர்களுக்கும் மஇகா மீது நம்பிக்கையும், விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் மீது ஈர்ப்பும் எழுந்துள்ளதை தன்னால் உணர முடிவதாகவும் முருகையா தனதுரையில் தெரிவித்தார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத்தேவனும் சாமிரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தார்.

இந்தக் கூட்டத்தில் மஇகா சாமி ரோட் கிளையின் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையுரையாற்றினார்.