ஜெருசலம் : 5-வது நாளாக இஸ்ரேலுக்கும் ஹாமாஸ் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் அதிகரித்துள்ளன. இஸ்ரேலின் வர்த்தகப் பகுதிகளில் ஹாமாஸ் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து இஸ்ரேலுன் வான்வழித் தாக்குதல்களை அதிகரித்தது. இதன் காரணமாக இருதரப்புகளிலும் மரண எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்யவும் தற்காக்கவும், தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் என இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹூ அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் மொகிதின் யாசின் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான மோதல்கள் இவை என வர்ணிக்கப்படுகின்றன.
டெல் அவில் மீதும் பீர்ஷெபா மீதும் பாலஸ்தீன போராளிகள் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நூற்றுக்கணக்கில் வான்வெளித் தாக்குதல்களை காசா பகுதியில் நடத்தினர்.
ஹாமாஸ் மையங்களையும் அவர்களின் ஏவுகணைத் தாக்குதல் முனைகளையும் குறிவைத்துத் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.
திங்கட்கிழமை தொடங்கி 1000-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை ஹாமாஸ் பிரிவினர் நடத்தினர் என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டியது.