கோலாலம்பூர்: கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார அமைப்பின் நிலையை தடுமாற வைக்கிறது.
சுங்கை புலோ மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை கொவிட் -19 பாதிப்பின் விளைவாக இறந்தவர்களின் உடல்களை சேமித்து வைப்பதற்கு கூடுதலாக சிறப்புக் கொள்கலன்களை தயார் செய்துள்ளது.
இதனை சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளைப் பயன்படுத்துவது இன்றுவரை நாடு முழுவதும் 80 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பல மாநிலங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை பயன்பாட்டை 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன. இதில் சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக் மற்றும் கெடா ஆகியவையும் அடங்கும்.
“நாட்டில் கொவிட்-19 இறப்புகளில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வயதானவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று, கொவிட்-19 காரணமாக 36 இறப்புகள் பதிவி செய்யப்பட்டன. சனிக்கிழமையன்று நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 44 இறப்பு விகிதம் பதிவாகியது.