கோலாலம்பூர்: பினாங்குக்கு இரண்டு மில்லியன் சினோவாக் தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவதாக இருந்த நிறுவனம் உண்மையில் இல்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
கைரி இன்று இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் இந்த விஷயத்தை தெரிவித்தார்.
அவரது ஆய்வில் இந்த நிறுவனம் இல்லை என்று தெரியவந்ததாகக் கூறினார்.
சினோவாக் மற்றும் மலேசியாவில் அதன் உரிமதாரரான பார்மானியாகா ஆகியோரும், இது தொடர்பாக தொடர்பு கொள்ளப்படவில்லை அல்லது நிறுவனத்திடமிருந்து எந்த ஒப்பந்தமும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
“பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் நேற்று செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, பினாங்கிற்கு தடுப்பூசி நன்கொடை வழங்குவதற்கான வாய்ப்பை நான் சரிபார்த்தேன்.
“நிறுவனம் ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் ஹாங்காங்கில் நிறுவனத்தின் பதிவுகளைச் சரிபார்த்தால் நிறுவனம் இல்லை என்று கண்டறியப்பட்டது. நாங்கள் சினோவாக் உடன் சோதனை செய்தோம், எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
“இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் வழங்குவதாக பினாங்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருப்பது ஒரு போலி விஷயம் . இது போலியானது மற்றும் ஒரு மோசடி. இது உண்மையல்ல,” என்று அவர் கூறினார்.