கோலாலம்பூர் : மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோவின் மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் பொறுப்பற்ற முதலாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று எச்சரிக்கை விடுத்தார்.
பெர்கேசோவின் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பில் இன்று இயங்கலை வழி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சரவணன் இதுகுறித்து விளக்கமளித்தார்.
“தவறான விண்ணப்பங்கள் கண்டனத்துக்குரியது. எல்லா விண்ணப்பங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறக் கூடும். பெஞ்சானா 2.0 விண்ணப்பங்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆவண மோசடி செய்தவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து காவல் துறை விசாரணையோ அல்லது ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையோ மேற்கொள்ளப்படலாம்” என்றும் சரவணன் தெரிவித்தார்.
வேலை செய்யாத தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்வதாக கையொப்பத்துடன் தகவல் அனுப்புவது, இதுவரை வேலையே செய்யாதவர்களின் தகவல்களை அனுப்பி ஊதிய ஊக்குவிப்புத் திட்டத்தில் மானியம் பெறுதல் போன்றவை தொடர்பில் இதுவரை 1758 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் 1231 புகார்கள் ஆதாரமற்றவை. 340 புகார்கள் உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 187 புகார்கள் இன்னும் விசாரணையில் உள்ளன.
இதுகுறித்து மேல் விவரங்களுக்கு அல்லது புகார் செய்ய கீழ்க்காணும் தொடர்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் சரவணன் தெரிவித்தார்.