Home நாடு சரவணன் முயற்சியால் மீண்டும் ஆர்டிஎம் 2-க்குத் திரும்பிய “வசந்தம்”

சரவணன் முயற்சியால் மீண்டும் ஆர்டிஎம் 2-க்குத் திரும்பிய “வசந்தம்”

465
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆர்டிஎம் 2-வது தொலைக்காட்சி அலைவரிசையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளியேறி வந்த நேர்காணல் நிகழ்ச்சி “வசந்தம்”. இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட நபர்கள், பிரபலங்களைச் சந்தித்து அதன் மூலம் இந்திய சமூகத்தின் பன்முகப் பிரச்சனைகளை விவாதிக்கும் நிகழ்ச்சி.

பாண்டித்துரை சிறப்பாகப் படைத்து வந்த இந்த நிகழ்ச்சி மக்களிடத்திலும் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தது.

ஆனால், கடந்த மே 1 ஆம் தேதி முன் அறிவிப்பு இன்றி ‘ஓகே’ என்ற புதிய அலைவரிசைக்கு மாற்றப்பட்டது “வசந்தம்” நிகழ்ச்சி. இந்திய தொலைக்காட்சி நேயர்கள் அரசாங்கத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஆர்டிஎம் 2-ஐத்தான் அதிகமாகப் பார்ப்பார்கள்.

#TamilSchoolmychoice

காரணம், அதில் ஒளியேறும் நாடகத் தொடர்கள், திரைப்படங்கள், தினசரி செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளாகும். அந்த அலைவரிசையில் வசந்தமும் பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இதனால் திடீரென வசந்தம் வேறொரு அலைவரிசைக்கு மாற்றப்பட்டதால் இந்திய சமூகத்தில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து மனித வள அமைச்சரான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்தார்.

தனது உறுதிமொழிக்கு ஏற்ப, சரவணன் எடுத்த நடவடிக்கையின் பலனாக எதிர்வரும் மே 22 முதல் மீண்டும் ஆர்டிஎம் தொலைக்காட்சி அலைவரிசை 2-இல் ஒளியேறவிருக்கிறது. சரவணன் மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் பலனாக இது சாத்தியமாகி உள்ளது.

கடந்த மே 1, தொழிலாளர் தினத்தன்று “வசந்தம்” நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த போதுதான் இந்த மாற்றம் குறித்து சரவணன் அறிந்தார்.

கடந்த 25 வருடங்களாக நடத்தப்பட்டு வந்த “வசந்தம்” நிகழ்ச்சி, கட்டண அலைவரிசைக்கு மாறியது குறித்து அதிருப்தி அடைந்த அமைச்சர், அத்தோடு நின்று விடாமல் இந்த மாற்றம் கூடாதெனக் நடவடிக்கைகள் எடுத்தார்.

மனிதவள அமைச்சர் நேரடியாக தொடர்புப் பல்லூடகத் தகவல் அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா அவர்களைச் சந்தித்து, இதுகுறித்து பேசி மீண்டும் வசந்தம் ஆர்டிஎம் 2 அலவரிசையில் வசந்தம் ஒளியேற ஏற்பாடு செய்தார்.

அதைத் தொடர்ந்துதான் எதிர்வரும் மே 22 முதல் வசந்தம் மீண்டும் ஆர்டிஎம் 2 தொலைக்காட்சி அலைவரிசைக்கு மீண்டும் திரும்புகிறது.

இந்த நல்ல மாற்றத்திற்காக விரைந்து நடவடிக்கை எடுத்த சரவணனுக்கும், அவரின் முயற்சிக்கு இணங்கி ஒத்துழைப்பு தந்த அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கும் சமூக ஊடகங்களில் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.