கோலாலம்பூர் : கடந்த ஓரிரு நாட்களாக சமூக ஊடகங்களில் மஇகாவின் தோற்றத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் தெரிவிக்கும் வகையில் காணொலி ஒன்று பரவி வருகிறது.
அந்தக் காணொலியில் ஒரு நபர் தாக்கப்படுவது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தாக்கும் நபர்கள் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரைப் பற்றியும் தவறாகப் பேசியதால் ஆதரவாளர்கள் சிலர் அந்த நபரைத் தாக்குவது போலவும் அந்தக் காணொலியில் காட்டப்படுகிறது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை (மே 2) நேரடியாக டாங் வாங்கி காவல் நிலையத் தலைமையகத்திற்கு சென்று இதுகுறித்து புகார் ஒன்றைப் பதிவு செய்தார்.
“நேற்று புதன்கிழமை (மே 19) மாலையில் நான் மஇகா தலைமையகத்தில் இருந்தபோது, எனக்கு வாட்ஸ்எப் வழி காணொலி (வீடியோ) ஒன்று அனுப்பப்பட்டது. ஒரு நபர் அந்தக் காணொலியில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்படுகிறார்.நான்கு நாட்களுக்கு முன்பாக தாக்கப்படும் நபர் என்னைப் பற்றியும், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பற்றியும் அவதூறாகப் பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டார் என்றும் ஏன் அப்படிச் செய்தாய் என கேள்வி கேட்டு அவரை அடிப்பது போலவும் தாக்கும் நபர்கள் உரையாடுகின்றனர். அதன்பின்னர் தாக்கப்பட்ட நபர் என்னிடமும் சரவணனிடமும் மன்னிப்பு கேட்கிறார். இந்த காணொலியைப் பார்க்கும் போது ஏதோ நானும் டத்தோஸ்ரீ சரவணனும் விடுத்த உத்தரவின்பேரில்தான் சம்பந்தப்பட்ட நபர் தாக்கப்படுகிறார் என்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் மஇகாவுக்கும், மற்ற தலைவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, எங்களின் மீது களங்கம் ஏற்படுத்தும் இந்த காணொலி குறித்து காவல் துறையினர் உடனடியாக விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அந்தக் காவல் துறை புகாரில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை (மே 19) இரவு 7.53 மணிக்கு டாங் வாங்கி காவல் நிலையத்தில் மேற்கண்ட புகாரை நேரடியாக சென்று பதிவு செய்தார் என்பதை அவரின் பத்திரிகைச் செயலாளர் எல்.சிவசுப்பிரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் மேற்குறிப்பிட்ட காணொலியின் உண்மைத் தன்மையை காவல் துறை கண்டறிந்து அறிவிக்கும் வரையில், அந்தக் காணொலியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து மஇகா பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ சமூக ஊடகங்களிலும், இணைய செய்தி ஊடகங்களிலும் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும் மஇகா சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் காவல் துறை புகார்களும் செய்யப்படும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என்றும் சிவசுப்பிரமணியம் மேலும் குறிப்பிட்டார்.