புத்ரா ஜெயா : இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி பலரும் எதிர்பார்த்தபடி முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
நாளை சனிக்கிழமை (மே 22) பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த மேலும் கடுமையாக்கப்பட்ட நிபந்தனைகளை அறிவிப்பார் எனவும் பிரதமர் அலுவலகத்தின் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 7-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் பல தளர்வுகளுடன் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படுகிறது.
நாளை அறிவிக்கப்படவிருக்கும் புதிய நிபந்தனைகள் மேலும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நாடு முழுமையிலும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.