Home நாடு சபா : அரசியல் திசை மாறுமா? ஷாபி அப்டால் மீண்டும் முதல்வரா?

சபா : அரசியல் திசை மாறுமா? ஷாபி அப்டால் மீண்டும் முதல்வரா?

836
0
SHARE
Ad

(சபாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் என்ன? முன்னாள் முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் மீண்டும் சபாவின் முதலமைச்சராக வருவார் என்ற ஆரூடங்கள் எழுந்தது ஏன்? விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

கோத்தாகினபாலு : கடந்த ஆண்டு 2020 செப்டம்பரில் நடைபெற்ற சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து சபா முதலமைச்சராக டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் பதவியேற்றார்.

ஜிஆர்எஸ் எனப்படும் காபுங்கான் ராயாட் சபா (Gabungan Rakyat Sabah) கூட்டணியின் தலைவரான ஹாஜிஜி நூர்  78 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சபா மாநிலத்தில் 48 தொகுதிகளோடு பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்து வருகிறார்.

அவர் ஆட்சி ஓராண்டு நிறைவைக் கூட இன்னும் எட்டவில்லை. அதற்குள் சபா அரசியல் களம் மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

2018-ஆம் ஆண்டிலும், அடுத்த இரண்டே வருடங்களில் 2020-ஆம் ஆண்டிலும் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்த சபா மாநிலத்தில் மீண்டும் அரசியல் காற்றுகள் திசைமாறி வீசத் தொடங்கியிருக்கின்றன.

வாரிசான் சபா கட்சித் தலைவரான ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சராக திரும்பலாம் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

என்ன நடக்கிறது சபாவில்? ஏன் இந்த திடீர் மாற்றங்கள்?

சில நாட்களுக்கு முன்னர் ஷாபி அப்டால் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். “சபாவில் ஒரு கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றால் அது பிபிஎஸ் கட்சிதான். அவர்களின் மாநில உரிமைகளுக்கான கொள்கைகள் எனக்குப் பிடிக்கும்” என்பதுதான் அந்தக் கருத்து.

அந்தக் கருத்தினால் விளைந்த தீப்பொறிதான் சபா அரசியலில் இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது.

ஜோசப் பைரின் கித்திங்கான் தோற்றுவித்த கட்சி பிபிஎஸ் எனப்படும் பார்ட்டி பெர்சாத்து சபா (Parti Bersatu Sabah – PBS). ஒரு காலத்தில் சபா மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தது. அதன் மூலம் பைரின் கித்திங்கான் மாநில முதலமைச்சராகவும் இருந்தார்.

இப்போது டாக்டர் மாக்சிமஸ் ஓங்கிலி பிபிஎஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

தற்போது தேசியக் கூட்டணியில் இணைந்திருக்கும் பிபிஎஸ் சபா சட்டமன்றத்தில் 7 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் எனப்படும் கூட்டணி தற்போது 30 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கின்றது.

பிபிஎஸ், வாரிசான் பிளஸ் இரண்டும் இணைந்தால் 37 தொகுதிகளைக் கொண்டிருக்கும்.

சபாவில் மொத்தமுள்ள 78 இடங்களில் ஆட்சி அமைக்கத் தேவையானப் பெரும்பான்மை 40 தொகுதிகளாகும்.

கூடுதலாக 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் வாரிசான் பிளஸ் புதிய கூட்டணியோடு ஆட்சி அமைக்க முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 73 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது சபா. ஆளும் மாநில அரசாங்கம் 5 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க முடியும். ஆக 78 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது சபா சட்டமன்றம்.

புகாயா எனப்படும் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் காலமாகிவிட்டதால் அந்தத் தொகுதி காலியாக இருக்கிறது. இன்னும் இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை.

ஆக தற்போதைக்கு 77 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் சபாவில் புதிய ஆட்சி அமைக்க 39 தொகுதிகளே போதுமானது.

இந்தக் கூட்டல் கணக்கினால்தான் சபா அரசியல் ஆரூடங்கள் புயலெனப் புறப்படத் தொடங்கியிருக்கின்றன.

தேசியக் கூட்டணியின் நிலையற்ற மத்திய ஆட்சிதான் சபா மாற்றத்திற்குக் காரணம்

சபா அரசியலில் குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கான காரணம், மத்தியில் ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆட்டம் கண்டிருப்பதுதான்.

நாடாளுமன்றப் பெரும்பான்மையை தேசியக் கூட்டணி இழந்து விட்டது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மொகிதின் அரசாங்கம் நீடித்துக் கொண்டிருப்பது தற்போது நடப்பிலிருக்கும் அவசர கால சட்டம் அமுலாக்கத்தினால்தான். ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் அவசர கால சட்டம் முடிவடைகிறது.

அதற்குப் பின்னர் அவசரகால சட்டத்தை மாமன்னர் அனுமதியுடன் நீட்டிக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத்தைக் கூட்டித் தனது பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். அல்லது புதிய கூட்டணி அரசாங்கம் அமையலாம்.

இதன் காரணமாகத்தான் சபா அரசியல் மாற்றத்திற்கான விதைகள் இப்போதே தூவப்படுகின்றன.

மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி 11 தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. அம்னோ 14 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணியில் மிக அதிகமானத் தொகுதிகளைக் கொண்டிருப்பது அம்னோதான். எனினும் சபாவில் ஹாஜிஜி நூர் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என சபா அம்னோ அறிவித்திருக்கிறது.

ஆனால், மத்திய அரசாங்கத்திற்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஆதரவு வழங்கப் போவதில்லை என அம்னோ தலைமைத்துவம் அறிவித்திருக்கிறது.

அம்னோ தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் நடப்பிலிருக்கும் தேசியக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும்.

அம்னோ, புதிய மத்திய அரசாங்கத்தை ஆதரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்கு ஆதரவாக ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அம்னோ நாடலாம். அதற்குப் பிரதிபலனாக ஷாபி அப்டாலுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தரலாம்.

இப்படியாக அடுத்து வரும் மாதங்களில் சபா அரசியலில் எதுவும் நடக்கலாம்.

ஷாபி அப்டாலுக்கு அம்னோ ஆதரவு தருமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மத்தியில் மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியின் ஆட்சி நடைபெறுவதால்தான் சபாவிலும் தற்போது நிலையான ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தேசியக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தால், அல்லது புதிய கூட்டணி அரசாங்கம் அமைந்தால், சபாவிலும் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறும்.

அந்த நிலையில் ஷாபி அப்டால் பிபிஎஸ் கட்சியோடு கைகோர்த்தால், அவருக்கு ஆட்சி அமைக்க மேலும் கூடுதலாக 3 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே தேவை. சில சிறிய கட்சிகள் அவருக்கு ஆதரவு தரமுன்வரலாம்.

மற்றொரு கோணத்தில், 14 தொகுதிகளைக் கொண்டிருக்கும் அம்னோ ஷாபி அப்டாலுக்கு ஆதரவு தரமுன்வந்தால், சபா அரசியல் களமே மாறிவிடும். மிகப் பெரிய பெரும்பான்மையோடு ஷாபி அப்டால் சபா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும்.

அன்வாருடனும் ஜசெகவுடனுமே கைகோர்க்கலாம் என்ற சிந்தனை பரவி வரும் அம்னோவில், ஷாபி அப்டாலுடன் இணைவது ஒன்றும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏற்கனவே அம்னோவின் உதவித் தலைவராக இருந்தவர்தான் ஷாபி அப்டால் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

ஜோசப் பைரின் கித்திங்கான் தம்பியான ஜெப்ரி கித்திங்கான் தலைமையிலான ஸ்டார் கட்சி 6 சட்டமன்றத் தொகுதிகளை சபாவில் கொண்டிருக்கிறது. இந்தக் கட்சியும் அடுத்த சபா மாநில மாற்று அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும்.

தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிபிஎஸ் கட்சிக்கும், ஸ்டார் கட்சிக்கும் இடையிலான உறவுகளும் சுமுகமாக இல்லை. இரண்டு கட்சிகளுமே சபாவின் கடாசான் டூசுன் மூருட் இன வாக்காளர்களைக் குறிவைத்துச் செயல்படுவதால் அவர்களுக்குள் முரண்பாடுகளும், மோதல்களும் எப்போதுமே நிலவி வரும்.

சபா அரசாங்கம் நிலையாக இருக்கிறது, அரசியல் மாற்றங்கள் என்ற பேச்சு ஆட்சியை ஆட்டம் காண வைக்க வகுக்கப்படும் ஒரு வியூகம்தான் என ஆரூடங்களை மறுத்திருக்கிறார் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர்.

எனினும் மலேசியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆகஸ்ட் -1 என்ற தேதி நெருங்க, நெருங்க, அதிரடி அரசியல் மாற்றங்கள் சபாவில் நிகழலாம் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

-இரா.முத்தரசன்