Home கலை உலகம் “தி பேமிலி மேன்” – தமிழர்களைத் தவறாகச் சித்தரிப்பதால் தடை செய்யப்பட வேண்டும் –...

“தி பேமிலி மேன்” – தமிழர்களைத் தவறாகச் சித்தரிப்பதால் தடை செய்யப்பட வேண்டும் – சீமான் எச்சரிக்கை

792
0
SHARE
Ad

சென்னை : அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையின் பிரபலமான இந்திய வலைத் தொடரான “தி பேமிலி மேன்” தமிழர்களைத் தவறாகச் சித்தரிப்பதால் அந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் போலவும் அவர்கள் பாகிஸ்தானின் ஐஸ்ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருப்பதுபோலவும் “தி பேமிலி மேன்” முன்னோட்டம் சித்திரிக்கிறது என்று கூறியிருக்கும் சீமான், அந்தத் தொடரை தடை செய்யாவிட்டால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என எச்சரித்திருக்கிறார்.

பெரும் வரவேற்பைப் பெற்ற “தி பேமிலி மேன்” 

“தி பேமிலி மேன்” தொடரில் மனோஜ் பாஜ்பாயி கதாநாயகனாகவும், அவரின் மனைவியாக பிரியாமணியும் நடித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்கும் முக்கிய அதிகாரியாக வரும் மனோஜ் பாஜ்பாயி பயங்கரவாதிகளைப் பிடிக்கும் சவால்களை எதிர்நோக்குவதிலும் அதே நேரத்தில் ஒரு குடும்பத் தலைவனாக எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகளையும் சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் எடுத்துக் காட்டிய படம் “தி பேமிலி மேன்”.

அந்தத் தொடரின் இரண்டாவது பருவம் (சீசன் 2) இந்த ஆண்டு வெளியாகும் என அமேசோன் அறிவித்ததோடு, அதில் பிரபல நடிகை சமந்தா நடிப்பார் என்றும் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் இரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வந்தது.

எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி “தி பேமிலி மேன்” அமேசோன் பிரைம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான முன்னோட்டமும் வெளியாகியிருக்கிறது.

சென்னையில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில்  சமந்தா ஒரு பெண் பயங்கரவாதிபோல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் அவரின் நடை, உடை, பாவனைகள் ஒரு விடுதலைப் புலி வீராங்கனையைப் போல் ஒத்திருக்கிறது.

வெளியான 3 நாட்களில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது “தி பேமிலி மேன்” முன்னோட்டம்.

மேலும் சமந்தாவை விடுதலைப் புலி வீராங்கனை போல் சித்திரித்திருப்பதால் தமிழர்களுக்கு எதிரான கதையைக் கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளும் சர்ச்சைகளும் தமிழக ஊடகங்களில் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, “தி பேமிலி மேன்” மிக அதிகமான ஈர்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் சீமான் இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து “தி பேமிலி மேன்” நிர்ணயிக்கப்பட்டபடி ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

அதே வேளையில் இந்தத் தொடர் குறித்த ஆர்வமும் ஈர்ப்பும் இரசிகர்களிடையே குறிப்பாக தமிழர்களிடையே அதிகரித்திருக்கிறது.

“தி பேமிலி மேன்”வலைத் தொடரின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: