Home நாடு சைட் சாதிக் கைப்பேசி பறிமுதல் : நாங்கள் உத்தரவிடவில்லை – எம்சிஎம்சி மறுத்தது

சைட் சாதிக் கைப்பேசி பறிமுதல் : நாங்கள் உத்தரவிடவில்லை – எம்சிஎம்சி மறுத்தது

555
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானின் கைப்பேசியை பறிமுதல் செய்ய நாங்கள் உத்தரவிடவில்லை என எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்ஊடக ஆணையம் (Malaysian Communications and Multimedia Commission – MCMC) தெரிவித்தது.

“காவல்துறையினரின் விசாரணையில் உதவும் தொழில்நுட்ப இலாகா என்ற முறையில்தான் எம்சிஎம்சி செயல்படுகிறது. மாறாக, காவல் துறையினர் தங்களின் விசாரணையை நிறைவு செய்ய தேவைப்படும் எந்த ஆதாரத்தையும் பறிமுதல் செய்ய நாங்கள் உத்தரவிடவில்லை”  என அந்த ஆணையம் தெரிவித்தது.

“எம்சிஎம்சி தொடர்ந்து தொழில் நுட்ப உதவிகளையும், பரிந்துரைகளையும் விசாரணைக்கு உதவும் பொருட்டு வழங்கி வரும். இதில் எங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இன்றி செயல்படுவோம். விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட உறுதி செய்வோம். இதில் எங்களுக்கு எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது” எனவும் எம்சிஎம்சி அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்தது.

சைட் சாதிக் மீது ஏன் இந்த விசாரணை?

#TamilSchoolmychoice

காவல்துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மரணமடைந்த ஏ.கணபதியின் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் தனது கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தி வரும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் வழங்க நேற்று சனிக்கிழமை (மே 22) கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு சைட் சாதிக் வந்திருந்தார். காவல் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய சைட் சாதிக்கின் கைப்பேசியை அப்போது காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல்துறை விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தனது சமூக ஊடகங்களின் தரவுகள், விவரங்கள், தகவல் அட்டை (SIM Card) ஆகியவற்றோடு தனது கைப்பேசியையும் காவல்துறையினர் வசம் ஒப்படைத்ததாகவும் சைட் சாதிக் தெரிவித்தார்.

இருப்பினும் காவல் துறையினரின் விசாரணை தனது இன்ஸ்டாகிராம் பதிவு குறித்தது மட்டுமே எனத் தன்னிடம் கூறப்பட்டிருந்த வேளையில் தனது கைப்பேசியைப் பறிமுதல் செய்தது ஏன் என்றும் சைட் சாதிக் கேள்வி எழுப்பினார்.

டாங் வாங்கி காவல் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.

தனது கைப்பேசியைப் பறிமுதல் செய்யும் உத்தரவு மலேசிய தொடர்பு பல்ஊடக ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் சைட் சாதிக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் எம்சிஎம்சி அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்றும் சைட் சாதிக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் தொடர்பில்தான் எம்சிஎம்சி தனது மறுப்பறிக்கையை வெளியிட்டிருக்கிறது.