Home நாடு செல்லியல் பார்வை : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் எதிர்நோக்கும் 3 சவால்கள்

செல்லியல் பார்வை : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் எதிர்நோக்கும் 3 சவால்கள்

564
0
SHARE
Ad

(கடந்த புதன்கிழமை, மே 26-ஆம் நாள் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். விக்னேஸ்வரன் தனது தலைமைத்துவத்தில் எதிர்நோக்கும் 3 முக்கிய சவால்கள் குறித்து தனது செல்லியல் பார்வையாக விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

செல்லியல் வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த புதன்கிழமை, மே 26-ஆம் நாள் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவரின் தலைமைத்துவத்திற்கு இயல்பாக அமைந்திருக்கும் 3 சாதகங்கள் என்ன, அவர் எதிர்நோக்கவிருக்கும் 3 அரசியல் சவால்கள் என்ன என்பது குறித்து கண்ணோட்டமிடுவோம்.

#TamilSchoolmychoice

முதல் சாதகம், பிளவுபடாத ஒற்றுமையான மஇகாவிற்கு தலைமையேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருப்பது.

விக்னேஸ்வரன் 2018-இல் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு அடுத்த நிலையில் கட்சியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த டத்தோஸ்ரீ எம்.சரவணனுடன் கைகோர்த்தார். மஇகாவின் துணைத் தலைவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தார்.

அப்போது முதல் இருவரும் இணைந்து மஇகாவுக்கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்கள்.

மொத்தமுள்ள மஇகா கிளைகளில் 3,620 கிளைகள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் கட்சியில் அவரின் ஆதிக்கமும் செல்வாக்கும் இருப்பதை எடுத்துக் காட்டும் இன்னொரு உதாரணம்.

இரண்டாவது சாதகம். விக்னேஸ்வரன் தனது கடும் முயற்சியால் கட்சியின் சொத்துகளையும் எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தையும் ஒருங்கிணைத்துக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பது.

மஇகா தலைமையகத்திற்கு அடுத்திருக்கும் நிலம் மஇகா தலைமையகத்தால் வாங்கப்பட்டிருக்கிறது. 40 மாடி புதிய கட்டடம் விரைவில் அங்கு நிர்மாணிக்கப்படவிருக்கிறது.

அரசாங்க ஆதரவில்லாமல், கட்சி சொத்துகளின் வருமானத்தைக் கொண்டும், உறுப்பினர்களின் சந்தாக் கட்டணத்தைக் கொண்டும், சில நல்ல உள்ளங்களின் உதவியோடும் மஇகா தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்பதை நிரூபித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரனுக்கு அமைந்திருக்கும் மூன்றாவது முக்கிய சாதகம், இந்தியர்களின் பார்வை மீண்டும் தேசிய முன்னணி பக்கமும், மஇகா பக்கமும் சாய்ந்திருப்பது.

பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் 2 ஆண்டுகால ஆட்சியில் துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் விளையவில்லை என்ற எண்ணம் இந்திய சமூகத்தில் எங்கும் எதிரொலிக்கின்றது.

ஆனால், அரசாங்கத்தில் இடம் பெறாவிட்டாலும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தில் தொடர்ந்து மஇகா வலுவுடன் திகழ்ந்தது. பல திட்டங்களை முன்னெடுத்தது.

மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மஇகா ஒரே ஒரு அமைச்சரைக் கொண்டு நிறைய சாதித்தது என்ற தோற்றம் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

கொவிட்-19 பாதிப்புகளால் இந்தியாவில் சிக்கிக் கொண்ட பெரும்பான்மை இந்தியர்கள் உள்ளிட்ட மலேசியர்களை சிறப்பு விமானத்தில் ஆயிரக்கணக்கில் மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவந்ததே இதற்கு சிறந்த உதாரணம்.

தேசிய முன்னணி கட்டமைப்பும், மஇகா, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதும்தான் தங்களின் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக இருக்கும் என்ற குரல்கள் இந்திய சமூகத்தில் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த உணர்வு மாற்றத்தை கட்சியும் அதன் தலைமையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் மஇகாவும் அது சார்ந்திருக்கும் தேசிய முன்னணியும் மேலும் அதிகமான இந்திய வாக்குகளைப் பெற முடியும்.

சரி! இனி விக்னேஸ்வரன் எதிர்நோக்கும் 3 சவால்கள் என்ன என்பதைப் பார்ப்போம்!

முதலாவது சவால் அவர், தான் தேர்ந்தெடுத்திருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றாக வேண்டும்.

வலிமையான தேசியத் தலைவராக இருந்தாலும் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறும்போதுதான் அரசியல் ரீதியான, அரசாங்க ரீதியான செல்வாக்கு பெற முடியும்.

தேசிய முன்னணி ஆட்சி அமைத்தால், அமைச்சராகவும் அரசாங்கத்தில் இடம் பெற முடியும்.

அவரும் இதை உணர்ந்து ஓராண்டுக்கு முன்னரே சுங்கை சிப்புட்டில் களமிறங்கி தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாகத் தொடங்கி விட்டார். கொவிட்-19 தொற்று பரவல் ஆட்டிப் படைக்கும் காலகட்டத்திலும் இயன்றவரை வாரம் தவறாமல் சுங்கை சிப்புட் சென்று வாக்காளர்களைச் சந்திக்கிறார். பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறார்.

முன்கூட்டியே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருப்பதால், அவர் சுங்கை சிப்புத் தொகுதியை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கள நிலைவரங்கள் தெரிவிக்கின்றன.

விக்னேஸ்வரன் எதிர்நோக்கும் இரண்டாவது சவால் மஇகாவுக்கு சரியான, வெற்றி வாய்ப்புள்ள, பொருத்தமான எண்ணிக்கையிலானத் தொகுதிகளை தேசிய முன்னணி சார்பாக 15-வது பொதுத் தேர்தலில் பெறுவது!

அதிகமானத் தொகுதிகளைப் பெற்று தோல்வியடைவதை விட, வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள குறைவான தொகுதிகளைப் பெறுவதே இன்றைய அரசியல் சூழ்நிலையில் முக்கியம் எனவும் அறிவித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரன் மஇகாவுக்கு எத்தனை தொகுதிகளை – எந்தத் தொகுதிகளைப் – பெறப் போகிறார் என்பதையும் முக்கிய சவாலாக இந்திய சமூகம் உற்று நோக்கி எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

விக்னேஸ்வரனின் 3-வது சவால், இந்திய சமூகத்தின் ஆதரவை, 15-வது பொதுத் தேர்தலில் பெறுவது!

இந்திய சமூகத்தின் உணர்வுகளும் நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல மஇகா பக்கமும், தேசிய முன்னணி பக்கமும் திரும்பி வருகின்றன என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த ஆதரவை வாக்குகளாக எப்படி உருமாற்றுவது என்பதுதான்  மஇகாவும் விக்னேஸ்வரனும் எதிர்நோக்கப் போகும் சவால்கள்.

15-வது பொதுத் தேர்தலை கட்சியே நேரடியாக எதிர்கொள்ள 40 பேர் ஒரே நேரத்தில் பணியாற்றக் கூடிய “WAR ROOM” என்ற வியூக மையம் மஇகா தலைமையகத்தில் அமைக்கப்பட்டுவிட்டது எனவும் விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் பொதுத் தேர்தல் தரவுகளை இனி மஇகாவே நேரடியாக ஆய்வுகளின் மூலம் பெற்று செயல்படும் எனவும் கூறியிருக்கிறார்.

மஇகா சில தொகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு அங்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இந்திய வாக்குகளைத் திரட்டும் பணியில் ஏற்கனவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும் 15-வது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இந்திய வாக்குகளை மஇகா பக்கமும், தேசிய முன்னணிக்கு ஆதரவாகவும் திரட்டுவதுதான் விக்னேஸ்வரன் எதிர்நோக்கும் மிகப் பெரிய – எல்லாவற்றையும் விட சாதிக்கக் கடினமான – சவாலாக இருக்கும்.

-இரா.முத்தரசன்