கோலாலம்பூர் : பேராக் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான சாம்ரி அப்துல் காதிர் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) இயங்கலை வழி நடத்தப்பட்ட தேசிய முன்னணியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி அறிவித்தார்.
தேசிய முன்னணியின் நடப்பு தலைமைச் செயலாளரான அகமட் மஸ்லானுக்கு பதிலாக சாம்ரி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அம்னோ, மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகிய நான்கு தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளும் இந்த ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சாம்ரியின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
2009 முதல் 2018 வரை சாம்ரி பேராக் மாநில மந்திரி பெசாராகப் பணியாற்றினார்.
இதற்கிடையில் அகமட் மஸ்லான் தொடர்ந்து அம்னோ தலைமைச் செயலாளராக நீடிக்கிறார். அவர் அந்தப் பதவியில் தொடர்வாரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அகமட் மஸ்லான் சில ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கி வருவதால் அவர் தேசிய முன்னணி தலைமைச் செயலாளராக தொடர்வதில் தேசிய முன்னணிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் நிலவின.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவராகவும் சாம்ரி நியமிக்கப்பட்டார்.