Home அரசியல் இனி சுல்கிப்ளிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போகும் ஹிண்ட்ராப்!

இனி சுல்கிப்ளிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போகும் ஹிண்ட்ராப்!

656
0
SHARE
Ad

Untitled-1

ஏப்ரல் 19 – இந்து மதத்தின் ஆணி வேராக விளங்கும் உருவ வழிபாடுகளையும், அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளையும் மிகக் கேவலமான முறையில் பேசி, மலேசியாவில் வாழும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் மனதையும் புண்படுத்திய பெர்க்காசா துணைத்தலைவரான சுல்கிப்ளி நோர்டினுக்கு, தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் இடம் கொடுத்தது குறித்து, நாடு முழுவதும் உள்ள இந்திய மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் போது,

‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும்’ விதமாக, அதற்கு மறுநாளே ஹிண்ட்ராப் தனது ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணியிடம் தாரை வார்த்துவிட்டு, தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தியர்களின் துயர் துடைக்க வந்த விடிவெள்ளியாக தங்களை அறிவித்துக்கொண்டு, இனவாத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள் என அம்னோவிற்கு எதிராக, அன்று வீதி வீதியாக முழக்கமிட்டு, துண்டுக்காகிதங்களைப் பறக்கவிட்ட ஹிண்ட்ராப், இன்று அதே வீதிகளில் அம்னோவுடன் கைகோர்த்துக் கொண்டு, இந்திய சமூதாயத்தை துச்சமென மதிக்கும் சுல்கிப்ளி போன்றோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவது காலத்தின் கொடுமை.

இந்தியர்களின் மானம் எந்த கப்பல் ஏறிப்போனால் நமக்கு என்ன? தேசிய முன்னணியை ஆதரிப்பதன் மூலம் அரசியலில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துவிடுவோம் என்ற எதிர்காலத் திட்டம் தானே வேதமூர்த்தி அவர்களே?

இந்தியர்களின் நலனுக்காக நாங்கள் வரைந்த ஐந்தாண்டுத் திட்டத்தை, தேசிய முன்னணி மட்டுமே ஏற்றுக் கொள்கிறது எனவே பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கப் போகிறோம் என்று வாய்கூசாமல் காரணம் கூறுவது எந்த வகையில் நியாயம்?

சுல்கிப்ளியின் பேச்சுக்கு வாய் திறக்காத நஜிப் 

உண்மையில் தேசிய முன்னணியின் தலைவரான நஜிப், இந்தியர்களின் ஆதரவு எப்போதும் தனக்கு வேண்டுமென்று நினைத்திருந்தால் சுல்கிப்ளியை தன்னுடன் இணைத்திருக்க மாட்டார்.

இத்தனை ஆண்டுகாலமாக தனது விசுவாசியாக இருந்து வரும் ம.இ.கா வேண்டுமென்று நினைத்திருந்தால், சுல்கிப்ளியின் இனவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கு எப்போதோ கண்டனம் தெரிவித்திருப்பார்.

ஆனால் சுல்கிப்ளி என்ற தனி மனிதர் ஒருவரின் பேச்சை, ஒரு தேசிய கட்சிக்குத் தலைவராக இருந்தும் நஜிப் இதுவரை  தட்டிக்கேட்கவில்லையே ஏன்? அப்படி செய்தால் தனது அரசியல் வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருந்து வரும் அம்னோ எங்கே தனக்கு எதிராகத் திரும்பி விடுமோ என்ற காரணம் தான்.

சுல்கிப்ளியை ஆதரித்து அம்னோவை குஷிபடுத்திய நஜிப், அதனால் கிளம்பியிருக்கும் இந்திய மக்களின் எதிர்ப்பை சமாளிக்க, வேறு வழியின்றி தற்போது ஹிண்ட்ராப்பை ஆதரிக்க முன்வந்திருக்கும் அரசியல் சூட்சமம் கூடவா ஹிண்ட்ராப்புக்கு தெரியவில்லை?

இந்தியர்களின் நம்பிக்கைகளின் மீது எப்போதும் வெறுப்பை உமிழும் மனப்பான்மை கொண்ட சுல்கிப்ளியா, நாளை ஹிண்ட்ராப் வரைந்துள்ள நலத்திட்டத்தைப் பயன்படுத்தி, ஷா ஆலம் தொகுதியில் வாழும் இந்திய மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்?

அதே போல், தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இன்னும் பல சுல்கிப்ளிக்கள் நாட்டில் உருவாகி, நாடாளுமன்ற உறுப்பினர்களானாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை

வழக்கம் போல் ஹிண்ட்ராப்பும், ம.இ.காவும் ‘இதுவும் கடந்து போகட்டும்’ என்றவாறு தொடர்ந்து தங்களது கட்சியை மேம்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி, கடந்த 2008 ஆண்டுத் தேர்தலில், தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வெற்றியை அடையாமல் போனதற்குக் காரணமான அதே ஹிண்ட்ராப் தான், இம்முறையும் தேசிய முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆயுதமாக இருக்கப்போகிறது.

காரணம், ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களும் நேற்றோடு ஹிண்ட்ராப் என்ற இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த பற்றை விலக்கிக்கொண்டு விட்டனர்.

இனி உண்ணாவிரதம் இருந்தாலும், உள்ளிருப்புப் போராட்டம் செய்தாலும், இந்தியர்களிடம் வேதாவின் வாக்கு வேதவாக்காகாது!

பீனிக்ஸ்தாசன்