நஜிப் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகைக்கான அந்த வழக்கின் தீர்ப்பையும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே பெற்று விட்டது வருமான வரி இலாகா. சம்மரி ஜட்ஜ்மெண்ட் என்ற நடைமுறையின் கீழ் அந்த வழக்கின் தீர்ப்பு பெறப்பட்டது.
சம்மரி ஜட்ஜ்மெண்ட் (Summary Judgment) என்பது எப்படிப்பட்ட தீர்ப்பு என்றால், முழுமையான விசாரணையுடன் கூடிய தீர்ப்புக்கு முன்னரே ஆவணங்களின் அடிப்படையில், வழக்கு நடத்தும் நேரத்தைச் சுருக்கி, சீக்கிரமாகப் பெறப்படும் தீர்ப்பு.
பொதுவாக வங்கிக் கடன்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கி, சுங்கவரி, தீர்வைகள் போன்றவற்றிற்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் கடனாளிக்கு எதிர்வாதம் செய்வதற்கான முகாந்திரங்கள் இல்லை என நீதிமன்றம் முடிவு செய்தால் கடனைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடனாளிக்கு உத்தரவிடும்.
நஜிப் வழக்கில் அதைத்தான் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் செய்திருக்கிறது நீதிமன்றம்.
இதன் மூலம் நஜிப் உள்நாட்டு வருமானவரி வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டிய கடனாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 4 பிப்ரவரி 2021-ஆம் தேதியன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவர் செலுத்த வேண்டிய பணத்திற்காக முன்அறிவிக்கையை (நோட்டீசை) வருமான வரி வாரியம் அனுப்பியிருக்கிறது.
1.69 பில்லியன் ரிங்கிட்டையும் அதற்கான வட்டியையும் செலுத்தப்படாத வரையில் வட்டியால் அதன் மொத்தத் தொகை மேலும் கூடிக் கொண்டே போகும்.
2011-ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை நஜிப் தனது வருமான வரித் தொகை செலுத்தாத காரணத்தால் இந்தப் பிரச்சனையை அவர் எதிர்நோக்கியிருக்கிறார்.
வருமான வரி பாக்கியை செலுத்தாததால் திவால் வழக்கு
நஜிப்பின் மேல்முறையீடுகள்
வருமான வரி வாரியத்தின் திவால் வழக்கைத் தொடர்ந்து தனக்கு எதிரான அரசியல் சதி இதுவென்றும் தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட அரசாங்கத் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவென்றும் நஜிப் கடுமையாகச் சாடியிருந்தார்.
வருமான வரி பாக்கிக்கான உயர்நீதிமன்றத் தீர்ப்பை (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிர்த்தும் நஜிப், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மேல்முறையீடு எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட வருமானவரி தொகை தவறானது என்ற மேல்முறையீடு ஒன்றையும் நஜிப், வருமானவரி இலாகாவின் விசாரணை மன்றமாக செயல்படும் நடுவர்கள் ஆணையத்திலும் (Special Commissioners of Income Tax) சமர்ப்பித்திருக்கிறார்.
தீர்ப்புக்கு எதிரான தடையுத்தரவு
1967-ஆம் ஆண்டுக்கான வருமானவரி சட்டத்தின்படி வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இருந்தாலும் அதைக் காரணம் காட்டி வருமான வரி இலாகா மதிப்பீடு செய்யும் தொகையை ஒத்திப் போட முடியாது. மேல்முறையீடு செய்துள்ளேன் என்ற காரணத்தைக் காட்டி வருமானவரி பாக்கியைச் செலுத்தாமல் தவிர்க்க முடியாது.
அந்தத் தொகையை முதலில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் வழக்கில் வெற்றியடைந்தால் வருமானவரி இலாகா நீதிமன்ற தீர்ப்புப்படி உரிய தொகையை திருப்பிக் கொடுக்கும்.
இதற்கிடையில் தன்மீதான திவால் நடவடிக்கையை மேற்கொண்டு தொடராமல் இருக்க மற்றொரு இடைக்காலத் தடையுத்தரவு கோரி மனு செய்திருக்கிறார் நஜிப்.
தனக்கு எதிரான வருமான வரி பாக்கியைச் செலுத்த உத்தரவிடும் தீர்ப்புக்கு (கடந்தாண்டு ஜூலை மாதத்தில் பெறப்பட்ட சம்மரி ஜட்ஜ்மெண்ட்) இடைக்காலத் தடையுத்தரவு விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நஜிப் கோரியிருந்தார்.
அந்த மனு நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 11) கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நஜிப்புக்காக வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா வாதாடினார்.
அப்போது நஜிப் மீதான திவால் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என வாதாடினார் ஷாபி அப்துல்லா. ஆளும் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு தரப் போவதில்லை என அம்னோ அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் வருமான வரி இலாகா நஜிப் மீதான திவால் வழக்கைத் தொடுத்தது என்றும் ஷாபி வாதாடினார்.
இதற்குப் பதிலளித்த வருமானவரி இலாகாவின் வழக்கறிஞர், “இதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை. தீர்ப்பைப் பெற்றதும் அதைச் செயல்படுத்துவதும் தீர்ப்பில் கண்டுள்ள தொகையைக் கடனாளியிடம் இருந்து வசூலிப்பதும்தான் எங்களின் வேலை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்ப்பின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றாலும் எங்களின் மீது ஒன்றும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்ற குறைகூறல்கள் எழும்” என பதிலளித்தார்.
நேற்றைய வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 14-ஆம் தேதி) அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
அவரின் முடிவைத் தொடர்ந்து நஜிப்பின் அடுத்த கட்ட சவாலாக ஜூன் 16-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் மேல்முறையீடு அமையும்.