கோலாலம்பூர் : முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கம் தொடங்கியதிலிருந்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல வணிகங்களில் ஒன்று பூக்களுக்கான வணிகமாகும்.
வாடிக் கிடந்த அந்த வணிகர்களின் வாழ்க்கையில் “மணம் பரப்பும்” வகையில் தேசிய பாதுகாப்பு மன்றம் பூ வணிகத்திற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது என்ற மகிழ்ச்சி தரும் செய்தியை சரவணன் தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றின் வழி அறிவித்தார்.
கடந்த சில நாட்களாக பூ வணிகர்கள் தங்களின் வணிகம் பாதிப்படைகிறது என்ற முறையீடுகளுடன், ஏராளமான பூக்களைத் தாங்கள் பயன்படுத்த முடியாமல் வீசி எறியும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத்திடம் முறையிட்டிருந்தனர்.
குறிப்பாக கேமரன் மலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பூக்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். தாங்கள் ஏற்றுமதி செய்யும் பூக்களை எங்கும் விற்பனை செய்ய முடியாமல் அவை தங்களின் கண் முன்னே வாடி வதங்குவதைக் காணும் சோகத்தை எதிர்நோக்குவதாகவும், அவற்றை அப்படியே பயன்படுத்த முடியாமல் குப்பைகளாக வீசி எறிவதாகவும் பூ வணிகர்கள் தங்களின் நெருக்கடிகளை ஊடகங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் பிரச்சனையை தேசியப் பாதுகாப்பு மன்றத்திற்கும், அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு சென்ற மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பாதிக்கப்பட்ட பூ வணிகர்களின் வாழ்க்கையில் மீண்டும் மணம் பரப்பும் முடிவை இன்று அறிவித்திருக்கிறார்.