கோலாலம்பூர்: விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னருக்கு ஆலோசனை வழங்கத் தவறினால் பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வேண்டியிருக்கும் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற அல்- சுல்தான் அப்துல்லா உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் இன்று காலை ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.
“நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க பிரதமர் தொடர்ந்து சாக்கு போடுகிறார் என்றால், அவர் மாமன்னரின் கருத்துக்களை புறக்கணிக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், பிரதமர் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கான நம்பிக்கையை இழந்துவிட்டார் என்ற தோற்றத்தையும் தருகிறது.
“மாமன்னருக்கு உடனடியாக அறிவுறுத்த பிரதமர் மறுத்தால், அவர் பதவி விலக வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.