கங்கார்: மாநில சட்டமன்ற அமர்வுக்கு ஒரு திட்டவட்டமான தேதியை நிர்ணயித்த முதல் மாநிலமாக பெர்லிஸ் திகழ்கிறது. மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 24 முதல் மாநில சட்டமன்றம் மூன்று நாட்களுக்கு மீண்டும் கூட்டப்பட உள்ளது.
பெர்லிஸ் சபாநாயகர் ஹம்டான் பஹாரி, 14- வது மாநில சட்டமன்றத்தின் நான்காவது அமர்வின் முதல் கூட்டம் பெர்லிஸின் ராஜா, துவான்கு சைட் சிராஜுடின் புத்ரா ஜமல்லுல்லாயின் ஒப்புதலைப் பெற்றுள்ளது என்றார். மேலும், ஆகஸ்டு 24 அன்று அது தொடங்கும் என்று அவர் கூறினார்.
“ஆகஸ்டு 1-ஆம் தேதி அவசரநிலை முடிவடையும் என்பதால் மாநில சட்டமன்றத்தை கூட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
“கொவிட் -19 காலகட்டத்தில் மாநில சட்டமன்றம் கூட்டப்படுவது இது முதல் தடவையல்ல, ஆனால் முன்னர் செய்ததைப் போல நிர்வாக நடைமுறைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்,” என்று அவர் கூறினார்.