Home கலை உலகம் திரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின் போரடிப்பு!

திரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின் போரடிப்பு!

841
0
SHARE
Ad

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நெட்பிலிக்ஸ் கட்டண வலைத்திரையில் வெளியாகியிருக்கிறது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் 17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழில் மிக அதிகமான மொழிகளில் வெளியிடப்படும் படம் இதுதான் என்ற சாதனையையும் புரிந்திருக்கிறது “ஜகமே தந்திரம்”.

தனுஷூடன் ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரபலமாகிவிட்டன.

கதை – திரைக்கதை

#TamilSchoolmychoice

மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கும் சுருளி என்ற ரவுடி கதாபாத்திரமாக வருகிறார் தனுஷ். இடையிடையே அடிதடிகளில் ஈடுபடுகிறார். அவ்வப்போது சம்பவங்களாக சில கொலைகளைச் செய்கிறார்.

ஒரு கொலையில் போலீஸ் தேட தலைமறைவாகிவிடும்படி அவருக்கு அறிவுரை கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், இலண்டனில் இருந்து வரும் இன்னொரு வெள்ளைக்கார தாதா, தனுஷின் சண்டையை அவரின் பரோட்டா உணவகத்தில் பார்த்து விட்டு அதிசயிக்கிறார். அவரை “சில சம்பவங்களுக்காக” இலண்டன் அழைத்துச் செல்கிறார்.

இலண்டனில் இரண்டு தாதா கும்பல்கள் ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருக்கின்றன.

வெள்ளைக்கார தாதாவை தலைவராகக் கொண்டது ஒரு கும்பல். சிவதாஸ் என்ற இலங்கைத் தமிழரை தலைவராகக் கொண்டது இன்னொரு கும்பல்.

வெள்ளைக்காரத் தாதாவால் சேர்த்துக் கொள்ளப்படும் தனுஷ், சிவதாசையும் அவரின் கும்பலையும் கொன்று தீர்க்கப் பணிக்கப்படுகிறார்.

இலங்கைத் தமிழர் கும்பலை தனுஷ் கொன்றாரா? அந்த மோதலால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? இடையே தனுஷூக்கு ஏற்படும் காதல். அந்தக் காதலியைக் கைப்பிடித்தாரா? வெள்ளைக்காரத் தாதாவுக்கும் தனுஷூக்கும் இடையில் ஏன் மோதல் ஏற்படுகிறது? இப்படியாகச் செல்கிறது கதை!

இவற்றுக்கிடையே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் காட்டியிருக்கிறார்கள்.

முதல் பாதி இரசிப்பு

படத்தின் முதல்பாதியை இரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் பாணியில் உள்ளூர் கேங்க்ஸ்டர் – ரவுடிகள் எப்படி இயங்குகிறார்கள் என்பதை ஜாலியாகக் காட்டியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் குடியேறிய வடநாட்டு வணிகப் பிரமுகரை, வெளிமாநிலத்திலிருந்து வந்தவர் என்ற காரணம் காட்டி படத்தின் ஆரம்பக் காட்சிகளில் தனுஷ் கொல்வதும், பின்னர் இலண்டன் செல்லும்போது அங்கு வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வெள்ளைக்கார தாதாவை எதிர்கொள்வதும் திரைக்கதையில் நல்ல உத்தி. ஆனால், அதை இன்னும் நன்றாகச் செம்மைப்படுத்தாமல் விட்டு விட்டார்கள்.

ஆங்கிலம் தெரியாத உள்ளூர் ரவுடி இலண்டன் செல்வதும் அங்கு அரைகுறை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாளருடன் தடுமாறுவதும் படத்தின் மற்ற சுவாரசியங்கள்.

நாமும் தனுஷ் இலண்டனில் எப்படி சமாளிக்கப் போகிறார் என ஆர்வமாகப் பார்க்கத் தொடங்குகிறோம்.

ஆனால் இடைவேளைக்குப் பின்னர் இயக்குநர் சொதப்புகிறார்.

படம் எங்கெங்கோ செல்கிறது. கட்டமைப்பு இல்லாமல் இடைவேளைக்குப் பின்னர் படம் பயணிக்கிறது.

இரண்டாம் பாதியில் மனதை நெருடும் விதமாக அழுத்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும் ஒரே அம்சம், இலங்கைத்தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சுகளுக்கிடையே எதிர்நோக்கும் இன்னல்களைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது.

அந்த குண்டு வீச்சை நேரில் கண்ட சிறுவன், இலண்டன்  வந்த பிறகும் நினைவுகள் மாறாமல், மேலே விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் ஓடிப் போய் மேசையில் ஒளிந்து கொள்வது மனதைப் பிசையும் சோகம்.

அகதிகளாக இலங்கைத்தமிழர்கள் எப்படி இலண்டன் வந்து சேர்கிறார்கள், அதில் அவர்கள் படும் சிரமங்கள் என இலங்கைத் தமிழர்களின் இன்னொரு கோணப் பிரச்சனையையும் மனதை நெருடும் வண்ணம் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள்.

அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி படத்தின் இரண்டாவது பாதியில் பாராட்ட எதுவுமில்லை.

ஒளிப்பதிவு மட்டும் தரமாக இருக்கிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்.

மதுரை பரோட்டா கடை சண்டைகளில் ஒளிப்பதிவாளர் புகுந்து விளையாடியிருக்கிறார். சண்டை நடக்கும் இடத்தில் இடத்தில் நாமே சிக்கிக் கொண்டது போன்ற பிரமையை படப்பிடிப்பும் படத் தொகுப்பும் ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தின் இயற்கை அழகையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

ஆனால் கதை- திரைக்கதையம்சத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். பிற்பாதியில் விறுவிறுப்பு கூட வேண்டிய இடத்தில் போரடிப்புக் காட்சிகள்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலம் என்றாலும், முக்கியப் பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை. நேரடியாகப் படம் நெட்பிலிக்சில் வெளியிடப்படுவதால், படத்தின் நீளம், உள்ளடக்கம் எல்லாவற்றையும் நெட்பிலிக்சே முடிவு செய்கிறது என்று கூறுகிறார்கள். அதனால் படத்தையும் சுருக்கி விட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளியேறும்போது பாடல்களோடு சேர்த்து படம் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் முதல் பாதியில் செலுத்திய கவனத்தை பிற்பாதியில் செலுத்தியிருந்தால்  படம் இன்னொரு ஜிகர்தாண்டாவாக பரிணமித்திருக்கும்.

தனுஷூக்கும் அசுரன், கர்ணன் வரிசையில் இன்னொரு மகுடத்தைச் சூட்டியிருக்கும்!

-இரா.முத்தரசன்

தொடர்புடைய திரைவிமர்சன காணொலி: