கோலாலம்பூர் : அம்னோவுக்கான கட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய நிலையில் அந்தத் தேர்தல்களை கட்சி சட்டவிதிகளுக்கு ஏற்ப அடுத்த 18 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும் முடிவை அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இயங்கலை வழி அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களிடையே இதற்குரிய தீர்மானம் அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த முடிவுக்கு சங்கப் பதிவகமும் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதன் பின்னர்தான் ஒத்தி வைப்பு அமுலுக்கு வரும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து கட்சியில் நடப்பு அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் கரங்கள் வலுப்பெற்று உள்ளதாகக் கருதப்படுகிறது.
அண்மைய சில நாட்களாக அவர் மீது உருவாக்கப்பட்ட நெருக்கடிகள் இனி தணியத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
சாஹிட் ஹாமிடி வழக்குகள் பாதிக்குமா?
சாஹிட் ஹாமிடி மீது வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அந்த வழக்குகள் முடிவடைந்து மேல்முறையீட்டு நடைமுறைகள் முடிவடைவதற்கு இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
அதுவரையில் சாஹிட் ஹாமிடி அம்னோவின் சட்டபூர்வ தலைவராக தொடர்வதோடு, கட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரத்திலும் இருப்பார்.
குறிப்பாக அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் அம்னோவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தையும் அவர் கொண்டிருப்பார்.
இந்த அதிகாரத்தின் மூலம் கட்சியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்ட அவரால் முடியும்.
அம்னோவின் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதை பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான தாஜூடின் அப்துல் ரஹ்மானும் (படம்) உறுதிப்படுத்தியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு முதல் காலாண்டில்தான் இனி அம்னோ தேர்தல்கள் நடத்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும். அதற்குள்ளாக எப்படியும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ தேர்தல் ஒத்தி வைப்பின் மூலம் சாஹிட் ஹாமிடிக்கு எதிராக தேசிய முன்னணியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரண்டிருக்கிறார்கள் என்ற அரசியல் நகர்வும் பிசுபிசுத்துப் போகும்.
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ், அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின் ஆகியோர் உள்ளிட்ட ஓர் அணியினர் சாஹிட் ஹாமிடிக்கு எதிராகத் திரண்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டே அம்னோ தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென இவர்கள் வற்புறுத்தி வருகின்றார்கள்.
அப்படி தேர்தல் நடத்துவதன் மூலம் சாஹிட்-நஜிப் இருவரின் ஆதிக்கத்தையும் கட்சியிலிருந்து அகற்ற முடியும் என்றும், புதிய தலைமைத்துவத்தை உருவாக்க முடியும் என்றும் சாஹிட்டுக்கு எதிரான அணியினர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இப்போது அவர்களின் அந்த வியூகம் சீர்குலைந்திருப்பதாக கருதப்படுகிறது.
நஜிப்பின் அரசியல் செல்வாக்கும் நிலைத்திருக்கும்
அம்னோ தேர்தல்கள் ஒத்திவைப்பு நஜிப் துன் ரசாக்குக்கும் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
காரணம், கடந்த 3 ஆண்டுகளாக சாஹிட்டும், நஜிப்பும் ஒருவரையொருவர் சார்ந்து பல பிரச்சனைகளுக்கிடையிலும் ஒத்த கருத்துடன் அரசியல் களமாடி வருகின்றார்கள்.
சாஹிட்டின் தலைமைத்துவம் அம்னோவில் தொடர்வது, நஜிப்புக்கும் சாதகமான அம்சமாகும்.
இருவரும் இணைந்து கட்சியில் தங்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவும், பொதுத் தேர்தல் என்று வரும்போது தங்களின் ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை வழங்கி தங்களின் அரசியல் செல்வாக்கை மேலும் நிலைநிறுத்திக் கொள்ளவும் அவர்கள் இனி வியூகம் வகுக்க முடியும்.