Home உலகம் ஈரோ 2020 : இத்தாலி 2-1 கோல்களில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது – கால் இறுதிக்கு முன்னேற்றம்!

ஈரோ 2020 : இத்தாலி 2-1 கோல்களில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது – கால் இறுதிக்கு முன்னேற்றம்!

463
0
SHARE
Ad

இலண்டன் : கடந்த இரண்டு வாரங்களாக குழுக்கள் அளவிலான ஈரோ 2020 காற்பந்து போட்டிகள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தற்போது 16 குழுக்கள் 2-வது சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

இந்த 16 குழுக்களுக்குள் இரண்டாவது ஆட்டம் நேற்று சனிக்கிழமை ஜூன் 26 இத்தாலி-ஆஸ்திரியா குழுக்களுக்கு இடையில் நடைபெற்றது (மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி).

இலண்டனின் வெம்ப்ளி அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த ஆட்டத்தில் இத்தாலி 2-1 கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் கால் இறுதி ஆட்டத்திற்குச் செல்லும் தகுதியைப் பெற்றது.

1-1 என்ற கோல் எண்ணிக்கையில் இரண்டு குழுக்களும் சம நிலையில் ஆட்டத்தை முடித்த நிலையில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இத்தாலி ஒரு கோல் போட்டு வெற்றியை ஈட்டியது.

டென்மார்க்கும் கால் இறுதிக்கு முன்னேற்றம்

இந்த 16 குழுக்களுக்குள் முதல் ஆட்டமாக நேற்று சனிக்கிழமை ஜூன் 26 நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டென்மார்க் மிகச் சிறப்பாக விளையாடி 4-0 கோல் எண்ணிக்கையில் வேல்ஸ் குழுவை வீழ்த்தியது.

இதன் மூலம் டென்மார்க்கும் கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் இப்போதுதான் டென்மார்க் முதன் முறையாக ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் நேற்று சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)