Home உலகம் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு : காவல் துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு : காவல் துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை

565
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையான ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல் துறை அதிகாரியான டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் கொண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கறுப்பின மக்களை ஓரணியில் திரட்டிய இந்தக் கொலைவழக்கு தற்போது ஒரு முடிவை அடைந்துள்ளது. எனினும் மேல்முறையீடுகள், தண்டனைக் குறைப்புகள் தொடரலாம் எனவும் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில், கடந்தாண்டு (2020) மே 25-ல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளானர். 47 வயதுடைய ஜார்ஜ் பிளாய்ட்டை கள்ள நோட்டு கொடுத்ததாக சந்தேகத்தின் அடிப்படையில், காவல் துறையினர் பிடித்தனர்.

#TamilSchoolmychoice

அப்போது ஜார்ஜ் பிளாய்ட்டை, டெரிக் சாவின் என்ற காவல் துறை அதிகாரி  தரையில் தள்ளி அவரது கழுத்தில் தன் முழங்காலை வைத்து பலமாக அழுத்தினார். சுமார் 9 நிமிடங்கள் அவரின் கழுத்துப் பகுதியில் டெரிக் சாவின் தனது முழங்காலைக் கொண்டு அழுத்தினார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிளாய்ட் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கண்ட பெண்மணி ஒருத்தி அதைக் காணொலியாக (வீடியோ) வெளியிட அந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டும், காவல் துறையினரால் தொடர்ந்து கறுப்பினத்தவருக்கு எதிராக நடத்தப்படும் இனவெறித் தாக்குதலுக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் கறுப்பினத்தவர்கள் அணி திரண்டனர்.

மற்ற உலக நாடுகளிலும் இந்த சம்பவத்தின் தாக்கம் எதிரொலித்து, ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் தொடர்ந்தன.

இதற்கிடையே டெரிக் சாவின் உட்பட நான்கு காவல் துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 45 வயதான டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை நேற்று சனிக்கிழமை (ஜூன் 26) அறிவிக்கப்பட்டது.

டெரிக் சாவினுக்கு, 22 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை வரவேற்பதாக ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற மூன்று முன்னாள் காவல்துறை அதிகாரிகள்  மீதான வழக்கு தனியாக நடக்கிறது.