கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் சட்டத்துறை அறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லாவின் துணைவியார் டத்தின் மேஹ்ருன் சிராஜ் செவ்வாய்க்கிழமை ஜூன் 29-ஆம் தேதி காலமானார்.
அவரின் மறைவுக்கு பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். “தனது அன்பு மனைவியை இழந்த சுலைமான் அப்துல்லாவுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டத்தோ டாக்டர் மேஹ்ருன் சிராஜ் ஒரு வழக்கறிஞராகத் திகழ்ந்ததோடு, சுஹாகோம் என்ற மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அவரின் இழப்பின் சோகத்திலிருந்து சுலைமானும் அவரின் குடும்பத்தினரும் மீள்வதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அன்வார் இப்ராகிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

சுலைமான் அப்துல்லா சில வழக்குகளில் அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்தவர் ஆவார். அவர் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், அரசாங்கத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவருமான டான்ஸ்ரீ ஜி.கே.ராமா ஐயரின் சகோதரர் ஆவார்.
சுலைமான் அப்துல்லா மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமாவார்.
கிருஷ்ணன் ஐயர் என்ற இயற்பெயரைக் கொண்ட சுலைமான் அப்துல்லா சட்டத்துறை பல்கலைக் விரிவுரையாளருமாவார். செவ்வாய்க்கிழமை மறைந்த அவரின் துணைவியார் மேஹ்ருன் சிராஜூன் மலாயாப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியவராவார்.
தனது 75-வது வயதில் மறைந்த மேஹ்ருன் சிராஜூன் உடல் நலக் குறைவால் மரணமடைந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.