எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி, கெய்ரோ அல் அலி கிளப் அணிக்கும் போர்ட் நகரில் உள்ள போர்ட் சயிட் அல் மாஸ்ரி கிளப் அணிக்கும் இடையில் கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் தகராறு ஏற்பட்டதை அடுத்து கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் அல் மாஸ்ரி அணி ரசிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கெய்ரோ கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதில் அல் மாஸ்ரி அணி ரசிகர்கள் 21 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது கோர்ட்டில் கூடியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்ட ரசிகர்களின் உறவினர்கள், நண்பர்கள் திடீர் வன்முறையில் இறங்கினர். தண்டனை விதிக்கப்பட்ட 21 பேர் அடைக்கப்பட்டுள்ள போர்ட் சயிட் சிறையை தகர்க்க முயற்சித்தனர். போலீஸ் நிலையங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீசார், 28 பேர் இறந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பதற்றம் அதிகரித்துள்ளதால் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.