Home நாடு நாடாளுமன்றம் அவசர கால சட்டத்தை விவாதிக்கும்

நாடாளுமன்றம் அவசர கால சட்டத்தை விவாதிக்கும்

608
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு, பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட அவசர கால சட்டம் குறித்து விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி கூடும் என பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிவித்தது. ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நாடாளுமன்றம் கூடும். அதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற மேலவை கூடும்.

இந்த கூட்டத் தொடரைத் தொடர்ந்து நாடாளுமன்றம் 6 மாதத்திற்குள் கூட வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டவிதி பூர்த்தி செய்யப்படுகிறது என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், அம்னோ விடுத்த கால அவகாசத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இன்றைய அறிவிப்பு அமைந்திருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்திருந்தார்.

அதே வேளையில் இன்று ஜூலை 5-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றக் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படாவிட்டால், எதிர்வரும் ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு முன்னால் கூடுவோம் என பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் மன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மலேசிய அரசியலமைப்பு சட்டம் 150 (3) இன்படி ஜனவரியில் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் இரண்டு நாடாளுமன்ற அவைகளின் முன்னிலையிலும் விவாதத்திற்கு விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த சிறப்புக் கூட்டத்தில், கொவிட்-19 தொடர்பான மீட்சித் திட்டம், ஹைபிரிட் எனப்படும் நேரலையிலும் நேரிலும் ஒருசேர நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவதற்கான சட்டத்திருத்தம் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.