Home நாடு தக்கியூடின் ஹாசான் : “ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும்”

தக்கியூடின் ஹாசான் : “ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும்”

646
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும் என்ற உத்தரவாதத்தை சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கூட்ட பிரதமர் முடிவு செய்திருக்கிறார் என்றும் தக்கியூடின் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் உட்பட நாட்டின் மேலாண்மை தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் மாமன்னரின் கருத்துகளுக்கு மத்திய அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தக்கியூடின் குறிப்பிட்டார்.

பக்காத்தான் தலைவர்கள் மன்றம் அறைகூவல்

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற மாமன்னரின் அறைகூவலைத் தொடர்ந்து, பிரதமர் மொகிதின் யாசின் இன்னும் மௌனம் காத்து வந்தால், எதிர்வரும் ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முன் கூடுவோம் என பக்காத்தான் ஹாரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் அறிவித்தது.

எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூட வேண்டும் என மாமன்னர் ஜூன் 16-ஆம் தேதி நடந்த மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்குப் பின்னர் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் ஹாருண், நாடாளுமன்ற மேலவை அவைத் தலைவர் ராய்ஸ் யாத்திம் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 29-ஆம் தேதி அரண்மனைக்கு அழைத்த மாமன்னர், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான உத்தரவுகளை அவர்களிடம் பிறப்பித்தார்.

அவர்களும் மாமன்னருடனான சந்திப்புக்குப் பின்னர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் மொகிதின் யாசினைக் கேட்டுக் கொண்டனர்.

புதன்கிழமையன்று (ஜூன் 30) வழக்கமாக நடைபெறும் அமைச்சரவையில் நாடாளுமன்றம் கூடுவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், பிரதமரோ, வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறி முதல் நாளே (செவ்வாய்க்கிழமை ஜூன் 29) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“ஜூலை 5-ஆம் தேதி வரையில் காத்திருப்போம். அதற்குள்ளாக மொகிதின் அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என்றால், இரண்டு வாரங்கள் கொண்ட முன் அறிவிப்போடு, நாங்கள் ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முன் கூடுவோம்” என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகிய மூவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.