Home வணிகம்/தொழில் நுட்பம் “அனைத்து தொழில் துறைகளும் செயல்படுவதற்கு அனுமதி வழங்குங்கள்” – மைக்கி கோரிக்கை

“அனைத்து தொழில் துறைகளும் செயல்படுவதற்கு அனுமதி வழங்குங்கள்” – மைக்கி கோரிக்கை

966
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டில் இயங்கும் அனைத்து தொழில் துறைகளும் தொடர்ந்து செயல்படுவதற்க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகர் தொழில்துறை சம்மேளனம் (MAICCI) கோரிக்கை விடுத்திருக்கிறது.

“அரசாங்கம் அனைத்து தொழிற்துறைகளுக்கும் கருணை காட்ட வேண்டும். வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இப்பொழுது வரை அவர்கள் வியாபாரத்தை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நிறைய வியாபாரிகள் தொழில் முனைவோர்களாக இருந்து வெளியேற வழிவகுக்கும்” என மைக்கியின் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வருத்தத்துடன் தெரிவித்தார்.

“அனைத்து தொழிற்துறைகளும் திறக்க அரசாங்கம் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நாங்களும் எங்களது வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பத்தை வழிநடத்துகிறோம். எங்களது பணியாளர்களுக்கும் ஊதியம் தருகிறோம். வியாபார செயல்பாட்டு செலவுகளை செலுத்துகிறோம். குடும்ப உறுப்பினர்களின் சுகாதார செலவுகளையும் எங்களின் பணியாளர்களுக்கும் நாங்கள்தான் செலவு செய்கிறோம். அவர்களுக்கு தேவைப்படும் அவசர நிதி உதவிகளையும் நாங்கள்தான் கொடுக்கிறோம். ஆனால் வியாபாரம் செய்யாமல் எவ்வளவு காலம் இச்செலவுகளை எங்களால் செய்ய முடியும்?” என கோபாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் வினவினார்.

#TamilSchoolmychoice

“இந்தியர்கள் பாரம்பரிய தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ளனர். காலம் காலமாக செய்யும் தொழிலை தவிர அவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாது. நிறைய முதலீடுகள் அவர்களது வியாபாரத்தில் செய்துள்ளனர். கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலையால் நாட்டில் முழு பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளது. இக்காலக்கட்டத்தில் ஒரு சில தொழில் துறைகள் செயல்படுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முடக்கி வைக்கப்படுள்ளத் தொழில் துறைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். முடி திருத்தும் நிலையம், ஜவுளி, உலோகம் மறுசுழற்சி மையங்கள் போன்று அனைத்து வியாபாரங்களும் செயல்பட அரசாங்கம் வழிவகுக்க வேண்டும்” எனவும் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

“அனைத்து வியாபாரங்களையும் திறப்பதினால் கோவிட்-19 கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம். அதனால்தான் நாங்களே முன் வந்து சொல்கிறோம். கடுமையான விதிமுறைகளை அறிவியுங்கள். நாங்கள் அதனைப் பின் பற்றி வியாபாரங்களை செய்கிறோம். பின்பற்றத் தவறுபவர்களை தண்டியுங்கள். அதனையும் ஏற்றுக் கொள்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“மக்களிடமும் நாங்கள் கோரிக்கைகளை வைக்கிறோம். அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடியுங்கள். முகக் கவசங்களை அணியுங்கள். உங்களின் அன்றாட நடவடிக்கைகளை பட்டியலிட்டு சரியான காலங்களில் செயல்படுத்துங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிருங்கள். முதியவர்களையும் பிள்ளைகளையும் வீட்டிலேயே இருக்க வழி செய்யுங்கள். இக்காலம் முக்கியமான காலம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் கோவிட் தொற்று நோயை முறியடிக்க முடியும்” என கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

“வியாபாரங்கள் நடைபெறவில்லை என்றால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், அரசாங்கம் மக்களுக்கு செய்ய முற்படும் அனைத்து நடவடிக்கைகளும் தடைபெறும். இதனால் நாட்டிற்கும் நமக்கும் தான் பாதிப்பு. இதனை நம் மனதில் கொண்டு செயல்படுவோம். மீண்டும் எழுச்சி பெற்ற மலேசியாவை உருவாக்குவோம்” என டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

அவ்வகையில், மைக்கி நாட்டின் பிரதமருக்கு, மற்ற அமைச்சுகளுக்கும் தங்களின் கோரிக்கையைக் கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளது. அரசாங்கம் கூடிய விரைவில் நல்ல பதிலை அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.