Home நாடு வழிபாட்டுத் தலங்களுக்கான ஒற்றுமை அமைச்சின் உதவிகள் பெற பதிவு செய்யுங்கள் – சரவணன்

வழிபாட்டுத் தலங்களுக்கான ஒற்றுமை அமைச்சின் உதவிகள் பெற பதிவு செய்யுங்கள் – சரவணன்

673
0
SHARE
Ad

வழிபாட்டுத் தலங்களுக்கான ஒற்றுமை அமைச்சின் உதவிகள் பெற பதிவுசெய்வது அத்தியாவசியம் – மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் விளக்க அறிக்கை

இந்து ஆலயங்களுக்கான அரசாங்கத்தின் உதவித்தொகை, முறையான வங்கிக் கணக்கைக் கொண்ட பதிவுபெற்ற ஆலயங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை ஒற்றுமைத்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.

சங்கப்பதிவு இலாகாவிலும், ஒற்றுமைத்துறை அமைச்சிலும் பதிவுபெற்ற ஆலயங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். எனவே ஆலய நிர்வாகங்கள், ஒற்றுமைத்துறை அமைச்சில் தங்கள் ஆலயங்களைப் பதிவுசெய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முறையாகப் பதிவு பெற்று, வங்கிக் கணக்குகள் கொண்டு, ஆலயங்களைச் செவ்வனே வழிநடத்தி வரும் ஆலய நிர்வாகங்கள் ஒற்றுமை அமைச்சின் கீழ் பதிவு செய்வது குறித்து அச்சப்படத் தேவையில்லை. “மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் எதற்கு?”

#TamilSchoolmychoice

இதன்வழி ஆலயங்களின் எண்ணிக்கை, அதற்கான மானியம் போதுமானதா என்பதைக் கண்டறிய ஏதுவாக இருக்கும். மேலும் முறையான நிர்வாகமும், வரவு செலவும் கொண்ட ஆலய நிர்வாகத்திற்குப் பணம் போய்ச் சேர்வதையும் உறுதிப்படுத்த முடியும். இதனால் இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக உதவி தேவைப்படும் ஆலயங்களுக்கு உதவி சென்றடையும்.

ஆலய பராமரிப்பு, பழுது பார்த்தல் தவிர இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களுக்காக நிதியுதவிக்கான விண்ணப்பங்களை ஆலயங்கள் முன் வைக்கலாம். சாயம் பூசுதல், கட்டுமானப்பணி போன்ற ஆலயப் பராமரிப்பிற்காக ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் போகாமல் நிதியுதவி பெறலாம். மின்சாரம், நீர் விநியோகிப்பு தொடர்புடைய இதர பணிகளுக்காக 50 ஆயிரம் வெள்ளிக்கும் மேல் போகாமல் நிதியுதவி வழங்கப்படும்.

இது தவிர இயற்கைப் பேரிடரால் பாதிப்பு அடைந்த ஆலயங்களுக்கும் ஒற்றுமை அமைச்சின் சிறப்புக்குழு பரிந்துரையின் பேரில் பிரத்தியேக நிதியுதவி கிடைக்க வாய்ப்புண்டு.

வழிபாட்டுத் தலங்களுக்கான இந்த உதவிகள் தொடர்பான விவரங்கள் மற்றும் அதற்கான பாரம் அனைத்தும் ஒற்றுமை அமைச்சின் https://perpaduan.gov.my எனும் அகப்பக்கத்தில் காணலாம்.

பாரத்தைப் பதிவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவைப்படும் ஆவணங்களை இணைத்து, இணையத்தில் வழங்கப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆக உண்மையாக உதவி தேவைப்படும் ஆலய நிர்வாகங்கள் முறையான ஆவணங்களுடன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.