கோலாலம்பூர் : புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அம்னோ முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து இன்று காலை தொடங்கி அமைச்சர்கள் பிரதமரின் இல்லம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
புக்கிட் டாமன்சாராவில் உள்ள மொகிதின் யாசின் இல்லத்திற்கு காலை 9.00 மணி தொடங்கி அமைச்சர்களும் பிரமுகர்களும் வரத் தொடங்கியிருக்கின்றனர்.
அவ்வாறு வருகை தந்தவர்களில் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருணும் அடங்குவார். நேற்று துணைப்பிரதமராக நியமனம் செய்யப்பட்ட இஸ்மாயில் சாப்ரியும் பிரதமர் இல்லம் வந்துள்ளார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்னோவின் முடிவைத் தொடர்ந்து பரபரப்பு
நேற்று புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இரவு 8.30 மணி தொடங்கி இயங்கலை வழி நடத்தப்பட்ட அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் நிர்ணயித்த 7 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய மொகிதின் யாசின் தவறி விட்டதால் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.
மொகிதின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்காலப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வழிவிட வேண்டும் என்றும் சாஹிட் கேட்டுக் கொண்டுள்ளார்.