சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆண்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதன் தொடர்பில் பல்வேறு விழாக்கள், கருத்தரங்குகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஜூலை 6-ஆம் தேதி இயங்கலை வழி நடத்தப்பட்ட சிறப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்ள டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும், மஇகாவுக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு சிறப்பு அழைப்பை விடுத்திருந்தது.
இந்தியாவுக்கு வெளியே மிக அதிகமான இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியாக திகழ்கிறது என்ற அடிப்படையில் மஇகாவுக்கும், அதன் தேசியத் தலைவர் என்ற முறையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்குக்கு சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சீனாவின் அதிபருமான ஜீ ஜின் பெங் தலைமை தாங்கினார். உலகம் எங்கிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடுகளின் பிரதமர்கள், அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு சிறப்புரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.
விக்னேஸ்வரன், தனதுரையில் சீனாவின் மக்களுக்கும் சீனா அதிபருக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சீனா உள்நாட்டில் மட்டுமின்றி தனது எல்லைகளைக் கடந்தும் அனைத்துலக அளவில் சிறப்பான மேம்பாட்டையும் தனித்துவத்தையும் கண்டிருப்பதற்கு சீன அதிபர் ஜீ ஜின் பெங்கின் ஆற்றல் மிக்க தலைமைத்துவத்திற்கு தனது பாராட்டுதல்களையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.
சீனா-மலேசியா இருநாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நலன்கள், பரஸ்பர மரியாதை அடிப்படையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு இருதரப்பு பரிமாற்றங்கள் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் தாம் ஆவல் கொண்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.