Home நாடு இஸ்மாயில் சாப்ரி, அம்னோ உச்சமன்ற முடிவுக்கு எதிராக துணைப் பிரதமர் பணிகளைத் தொடக்கினார்

இஸ்மாயில் சாப்ரி, அம்னோ உச்சமன்ற முடிவுக்கு எதிராக துணைப் பிரதமர் பணிகளைத் தொடக்கினார்

1061
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நடப்பு தற்காப்பு அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 9)  காலை முதல் தனது பணிகளைத் தொடக்கியிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை ஜூலை 7-ஆம் தேதி இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக பிரதமர் மொகிதின் யாசினால் நியமிக்கப்பட்டார். அதே நாளில் நடப்பு வெளியுறவு அமைச்சரான ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் அம்னோ உச்சமன்றத்தின் முடிவுக்கு எதிராக தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சில மாதங்களுக்கு முன்னரே அம்னோ உச்சமன்றக் கூட்டம், துணைப் பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. அதற்கு எதிராக இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளும் முடிவு அமைந்திருக்கிறது.

மேலும் கடந்த புதன்கிழமை (ஜூலை 7) தேசியக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்த அம்னோ உச்சமன்றம் மொகிதின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அறைகூவலையும் விடுத்தது.

அந்த முடிவுக்கு எதிராகவும் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பிளவுபடும் அம்னோவில் – அம்னோ உச்சமன்றக் கூட்டத்தின் முடிவுக்கு எதிராக – அணி திரளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமையேற்கவிருப்பதை பகிரங்கமாக இஸ்மாயில் சாப்ரி வெளிப்படுத்தியிருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை முன்னாள் பிரதமரும் தேசிய முன்னணியின் ஆலோசகர் மன்றத் தலைவருமான நஜிப் துன் ரசாக், அம்னோ உச்சமன்றத்தின் முடிவுக்கு எதிராக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில் நடவடிக்கைக்குத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இஸ்மாயில் சாப்ரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.