கோலாலம்பூர்: நாடு முழுமையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
அந்த நடவடிக்கையால் உண்மையில் பலன் விளைகிறதா? இதனால் தொற்றுகளின் எண்ணிக்கையை உண்மையில் குறைக்க முடியுமா?
என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன, நாள்தோறும் உயர்ந்து வரும் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால்!
அரசாங்கம் உண்மையில் கொவிட் தொற்றுகளைக் குறைக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கிறதா அல்லது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் சிந்தனை செய்கிறதா என்ற கடுமையானக் கண்டனங்கள் இணைய வலைத் தளங்கள் முழுவதும் பரவி வருகின்றன.
பல சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறுவணிகர்கள் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் அவதிப்படுகின்றனர். ஆனாலும் தொற்றுகள் நாள்தோறும் உயர்ந்து வருகின்றன.
இன்று மட்டும் 9,180 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
கிள்ளான் பள்ளத்தாக்கு முழுமையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வந்திருக்கும் நிலையிலும் மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், புதிய தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்டவை அருகருகே அமைந்திருக்கும் 3 மாநிலங்களில் பதிவானவை என்பதாகும். அந்த மாநிலங்கள் பின்வருமாறு:
சிலாங்கூர் – 4,400
கோலாலம்பூர் – 1,271
நெகிரி செம்பிலான் – 899
மொத்த தொற்றுகள் – 6,570
சிலாங்கூரும் நெகிரியும் ஒரே எல்லைக் கோட்டைக் கொண்ட மாநிலங்கள். கோலாலம்பூரும், சிலாங்கூரும் ஒன்றுடன் ஒன்றுடன் பின்னிப் பிணைந்த போக்குவரத்து, வணிக, நடமாட்ட வசதிகளைக் கொண்டவை.
இந்த 3 மாநிலங்களில் மட்டும் மொத்த தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள் – 6,570 – எனப் பதிவாகியிருக்கும் நிலையில் – இந்த 3 மாநிலங்களில் மட்டும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமுலாக்கி விட்டு, மற்ற மாநிலங்களில் வழக்கமான வாழ்க்கை நிலையை அமுல்படுத்தினால் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 817,838 ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூர் 4,400 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.
அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மூன்றாவது இடத்தை 899 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.
சரவாக் 406 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.