கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை ஜூலை 14 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 118 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும் அதிகமானதாக இருந்து வருகின்றன.
அதே வேளையில் தொற்று பீடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக 1 இலட்சத்தைக் கடந்து 101,359 என பதிவாகியது.
மேலும் 878 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 432 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,503 ஆக உயர்ந்தது.
ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 11,618
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 867,567 ஆக உயர்ந்திருக்கிறது.
மொத்தம் பதிவான 11,618 தொற்று சம்பவங்களில் 11,592 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 26 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 6,377 – ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 759,705 -ஆக உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையில், கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) நள்ளிரவு வரையில் 424,541 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.
நேற்று வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது. இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12,212,730 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் செலுத்தப்பட்ட 424,541 தடுப்பூசிகளில் 260,286 முதல் தடவை போடப்பட்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 164,255 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டவையாகும்.
மாநிலங்களைப் பொறுத்தவரை கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைப் போன்றே தடுப்பூசிகள் செலுத்துவதிலும் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.
சிலாங்கூர், கோலாலம்பூர், இணைந்த 2 மாநிலங்களில் இதுவரையில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன.
நேற்று வரையில் செலுத்தப்பட்ட 12,212,730 தடுப்பூசிகளில் 8,364,354 முதல் தடுப்பூசிகளாகும்.
எஞ்சிய 3,848,376 தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளாகும்.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 5,051 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.
மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,749 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மூன்றாவது இடத்தை 1,537 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.