Home உலகம் ஒலிம்பிக்ஸ் 2020 செய்திகள் : முதல் தங்கத்தை சீனா வென்றது

ஒலிம்பிக்ஸ் 2020 செய்திகள் : முதல் தங்கத்தை சீனா வென்றது

637
0
SHARE
Ad

தோக்கியோ : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ஆம் தேதி) ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் வண்ணமயமான காட்சிகளுடன், ஜப்பானுக்கே உரிய தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் ஒலிம்பிக்ஸ் 2020 அதிகாரபூர்வத் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, தொடங்கியிருக்கிறது ஒலிம்பிக்ஸ் போட்டிகள். கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய போட்டிகள் கொவிட் காரணமாக ஒராண்டு கடந்து இந்த ஆண்டு நடைபெறுகின்றன.

இருப்பினும் இந்தப் போட்டிகள் ஒலிம்பிக்ஸ் 2020 என்றே அதிகாரபூர்வமாக குறிப்பிடப்படுகின்றன

#TamilSchoolmychoice

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறித்த சில முக்கியச் செய்திகள் :

1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானின் முதல் ஒலிம்பிக்ஸ்

1964-ஆம் ஆண்டில் முதன் முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஏற்று நடத்திய ஜப்பான் இப்போது இரண்டாவது தடவையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஏற்று நடத்துகிறது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றிய நவோமி ஒசாகா

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வத் தொடக்க விழாவிற்குப் பின்னர் ஒலிம்பிக்ஸ் தீபம் அரங்கிற்குள் கொண்டுவரப்பட்டு, ஜப்பானின் முன்னாள் பதக்க வீரர்களில் கைமாறி இறுதியாக அண்மையக் காலமாக டென்னிஸ் விளையாட்டில் கலக்கி வரும் நவோமி ஒசாகாவுக்கு ஒலிம்பிக்ஸ் தீபம் ஏற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஜப்பானிய அரசர் நருஹித்தோ தொடக்கி வைத்தார்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஜப்பானிய அரசர் நருஹித்தோ, முகக் கவசம் அணிந்தபடி, சில வார்த்தைகளில் உரையாற்றி அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

காலியாகக் கிடந்த அரங்கம்

ஒலிம்பிக்ஸ் திறப்பு விழாவுக்காக 68 ஆயிரம் பேர் அமரும் விதத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட அரங்கத்தில் பார்வையாளர்களே இல்லாமல் திறப்பு விழா நடைபெற்றது என்றாலும்  – அதிகாரிகள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் என விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் அரங்கில் அமர்ந்திருந்தார்கள்.

முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றது

ஒலிம்பிக்ஸ் 2020 விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றிருக்கிறது.  10 மீட்டர் தூரத்துக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் சீனாவின் 21 வயது கியான் யாங் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

சீனா தனது பதக்க வேட்டையை எடுத்த எடுப்பிலேயே தொடக்கியிருக்கிறது. இதுவரையில் 2 தங்கப்பதக்கங்களை முதல்நாளிலேயே சீனா வென்றிருக்கிறது.