தோக்கியோ : நேற்று தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியில் இன்று சனிக்கிழமை (ஜூலை 24) இந்தியா யாரும் எதிர்பாராத வகையில் பளுதூக்கும் பிரிவில் வாகை சூடி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
பெண்களுக்கான 49 கிலோ எடைகொண்டவர்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மீராபாய் சானு இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
தோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
பளுதூக்கும் பிரிவில் ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெறும் இரண்டாவது இந்தியப் பெண்மணியாக மீராபாய் சானு திகழ்கிறார்.
இதற்கு முன் 2000-ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றார். அவரே பளுதூக்கும் பிரிவில் ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியாவார்.
அவருக்குப் பின் இன்று பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கிறார் மீராபாய் சானு.
மீராபாய்க்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.